சாகாவரம் பெற்ற சண்முகையா பாண்டியன்
போராட்டங்களும் சிறை வாழ்க்கையும்
தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் கல்வித் தந்தை மூக்கையாத் தேவருக்குப் பிறகு, தேவரினத்தின் எழுச்சியை சண்முகையா பாண்டியனுக்கு முன் மற்றும் சண்முகையா பாண்டியனுக்கு பின் என பிரிக்கலாம். அவ்வளவு போராட்டங்களையும், நீண்ட நெடிய சிறை வாழ்க்கையையும் சந்தித்தவர் சிம்மக்குரலோன் சண்முகையா பாண்டியன்.
1998-ல் நடைபெற்ற பசும்பொன் தேவர் குருபூஜையின்போது, மாற்று சாதி வெறியர்களால் பல படுகொலைகளும் வன்முறை சம்பவங்களும் நடந்தன. இதைத் தொடர்ந்து தேவர்குலக் கூட்டமைப்பின் தலைவரான சண்முகையா பாண்டியன் படுகொலைகளை கண்டித்து கமுதியில் உண்ணாவிரதம் இருந்தார். மேலும் தேவர் குருபூஜையின் போது, பரமக்குடி அருகே, பொன்னையாபுரம் மற்றும் பாம்பு விழுந்தான் பகுதியில் சாதி வெறியர்களால் தேவரின இளைஞர்கள் 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூற சண்முகையா பாண்டியன் தனது ஆதரவாளர்கள் சிலருடன் முதுகுளத்தூர், கடலாடி பகுதி ஊர்களுக்குச் சென்றார். செல்லும் வழியில் அவரை, பரமக்குடி பகுதியில் நடைபெற்ற கொலைகளை கண்டித்து வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக அவரையும் அவரது ஆதரவாளர்கள் பெருமாள், சுப்பிரமணியன், சின்னத்துரை, துரைசிங்கம், பாலமுருகன், சிவன்பாண்டி, கார்த்தி ஆகிய 8 பேரை காவல்துறை கைது செய்து, முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தது. இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் சண்முகையா பாண்டியனையும், 6 பேரை மதுரை மத்திய சிறையிலும், சிவன்பாண்டி, கார்த்திக் ஆகியோர் மைனர் வயதினர் என்பதால் மேலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளி சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
சண்முகையா பாண்டியன் கைது சம்பவம், கமுதி,முதுகுளத்தூர், கடலாடி, ஆகிய பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கைது சம்பவத்தை எதிர்த்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். போராடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பின்னர் அதைத் தொடர்ந்து சண்முகையா பாண்டியன் மீது ஒரு தரப்பை திருப்திப்படுத்த தேசப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டார். தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ், ஒருவரை கைது செய்தால், சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள, அறிவுரைக் கழகம் முன், அவரை ஆஜர்படுத்த வேண்டும். அவ்வாறு இந்தச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த சண்முகையா பாண்டியன், சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, அறிவுரைக் கழகம் முன், ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைக்குப் பின், அவர் மீண்டும் திருச்சி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவர் மீது தேசப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொய்யாக வழக்கு புனையப்பட்டுள்ளது என பசும்பொன் வழக்கறிஞர் சங்கத்தினர் எடுத்து வைத்த வாதங்களால், மாவீரன் சண்முகையா பாண்டியன் நீதிமன்றத்தால் ஏப்ரல் 5, 2013 அன்று ஒன்றரை வருடம் கழித்து விடுதலை செய்யப்பட்டார்.
சிறையில் இருந்து விடுதலையானவுடன் சண்முகையா பாண்டியன் நேரே பசும்பொன் சென்று தன் எல்லாம் வல்ல இறைவனை முதலில் தரிசனம் செய்தார்.
2012-ல் இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி எம்.கரிசல்குளத்தில், 144 தடை உத்தரவை மீறி, சாதி உணர்வை தூண்டும் வகையில் பிரசாரம் செய்ததாக, போலீஸார், தேவர்குல கூட்டமைப்பு தலைவர் சண்முகையா பாண்டியன் மற்றும், உடன் வந்த ஆறு பேரை, போலீசார் கைது செய்தனர்.
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை வைக்க வேண்டும் என மதுரையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்திக் காட்டினார். இந்த போராட்டத்தில், திராவிட கட்சிகள் எவ்வாறு தேவரின் பெயரை வைக்க விடாமல் நாடகம் ஆடுகிறது என பகிரங்கமாக தோலுரித்திக் காட்டினார். தனது பல போராட்டங்களில் ஆளும் அரசுகளை அவர் ஆட்டிப் படைத்தார் என்றால் அது மிகையில்லை.
அவரது போராட்டங்களைப் போலவே, அவரது சிறை வாழ்க்கையும் நீண்ட நெடியது. எத்தனை போராட்டங்கள் நடத்தினாரோ அவர் மீது அத்தனை வழக்குகளும் பதியப்பட்டன. தேவரைப் போலவே தன் வாழ்வின் பெரும் பகுதியை போராட்டங்களுக்கும் சிறை வாழ்க்கைக்கும் தியாகம் செய்தார். மொத்தம் அவர் மீது மொத்தம் 136 வழக்குகள் பதியப்பட்டன. அதன்மூலம் சுமார் ஆறு ஆண்டுகள் சிறையில் தன் வாழ்க்கையை கழித்தார்.
அரசியல் பயணம்
தேவர் குல கூட்டமைப்பு நிறுவனர் சிம்மக்குரலோன், சண்முகையா பாண்டியன், எந்த அரசியல் கட்சியையும் சாராமல் கடைசி வரையில் இருந்தார். அவர் ஃபார்வர்ட் பிளாக் கட்சியில் கூட உறுப்பினராக இருந்தது இல்லை. தன் அரசியல் கட்சி சார்பை பற்றி பின்வருமாறு அவரே கூறுகிறார்:- ‘நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவன் இல்லை. நானே ஒரு அரசியல் கட்சி ஆட்சிக்கு வர காரணமாக இருந்திருப்பேன். ஆனால் அதற்கு, ஜால்ரா என்னால் அடிக்க முடியாது. என் சமூகத்திற்கு ஒரு பாதிப்பு வரும்போது, அது திமுக, அதிமுக என எந்தக் கட்சியாக இருந்தாலும் அதைப் பற்றி கவலைப்பட மாட்டேன், என்னால் பேசாமல் இருக்க முடியாது. இதுவரை நான் அதிமுக, திமுக என யாருக்கும் நேரிடையாக வாக்களிக்க கூறியதில்லை. இந்த சர்க்கார் சரியில்லை என்று சொல்லி இருக்கிறேன். அதன்மூலம் இன்னொரு சர்க்கார் உருவாக மக்கள் வாக்களித்துள்ளார்கள்’ என்று தனது அரசியல் நிலைப்பாட்டை தெளிவாக கூறியுள்ளார்.
இடையில் முன்னாள் காவல்துறை இயக்குநர் திரு.பொன்பரமகுரு அவர்களுடன் இணைந்து சிறிது காலம் சமூகப் பணியாற்றினார். நேதாஜி தேசிய பார்வர்ட் பிளாக் என்ற இயக்கத்தையும் ஆரம்பித்து சிறிது காலம் நடத்தினார்.
இராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தல் உட்பட சில தேர்தல்களில் சண்முகையா பாண்டியன் போட்டியிட்டார். அவர் வெற்றி பெறவில்லை என்பதை விட தேவரினம் தோற்றுப்போனது என்பதுதான் உண்மை.
சண்முகையாப் பாண்டியனை இந்த தேவரினம் மட்டும் சட்டமன்றம் அனுப்பி இருந்திருந்தால், தேவரின மக்களின் அரசியல் நிலைமை வேறு வகையில் திசை திரும்பியிருக்கும். அவரை சட்டமன்றம் அனுப்பாத மாபெரும் பிழையை தேவரினம் செய்தது. அரசியல் தலைவர்கள் பலர் சண்முகையா பாண்டியனை கவனித்துக் கொண்டே இருந்தனர். செல்வி ஜெயலலிதா திருநெல்வேலி வந்திருந்தபோது நெல்லை ஆர்யா ஹோட்டலில், சண்முகையா பாண்டியனை சந்தித்தார்.
2000ம் வாக்கில் தென் தமிழகத்தில் தொடர்ந்து தேவரினம் பாதிக்கப்படுவதால், அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதியை சென்னை தலைமைச் செயலகத்தில் போய் சந்தித்து தனது கோரிக்கைகளை முதல்வரிடம் கூறினார். இந்த சந்திப்பை வைத்து அவரது எதிரிகள் அவருக்கு எதிராக வதந்தி பரப்பினர். இவர் கருணாதியை இரகசியமாக சந்தித்ததாகவும், சில விஷயங்கள் பேசி தனது செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படுத்திக் கொண்டதாகவும், அவருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரை முடக்க முயற்சித்தனர். அரசியல்வாதிகள் இவரை பயன்படுத்திவிட்டு, பழிகளை மட்டும் இவர் மீது திருப்பிவிட்டனர். குறிப்பாக அஇஅதிமுக இவருக்கெதிரான ஆதரவை பிளவுபடுத்த முயற்சித்தது. மக்களும் இந்த வதந்திகளை நம்ப ஆரம்பித்ததால், சண்முகையா பாண்டியன், ஒரு 10 வருட காலம் சமுதாய பணிகளில் இருந்து ஒதுங்கி இருக்க ஆரம்பித்தார்.
இறுதிக் காலம்
சண்முகையா பாண்டியன் பத்து வருடம் வனவாசம் போல் ஒதுங்கியிருந்ததற்குப் பிறகு மீண்டும் சமூகப் பணிகளில் முழுவீச்சாக தன்னை ஈடுபடுத்திக்கொள்ள ஆரம்பித்தார். அதே துடிப்புடன், இரு மடங்கு வேகத்துடன் தனது சமுதாயப் பணியில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல், தனக்கே உரிய பாணியில் பம்பரமாக மீண்டும் சுழன்று கொண்டிருந்தார்.
அம்பாசமுத்திரத்தில் செப்டம்பர் 7, 2024 அன்று அவர் தலைமையில்தான் திருமணம் நடக்க வேண்டும் என்று வீட்டிற்கு வந்து சில நாட்கள் முன்பாக உறவினர்கள் அழைப்பு விடுத்துச் சென்றனர். கண்டிப்பாக வருகிறேன் என்று உறுதியளித்துவிட்டு, வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த அவருக்கு இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே நெஞ்சில் வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் பயம் என்றால் என்ன என்றே தெரியாத மாவீரன், நெஞ்சில் ஏற்பட்ட வலியை உதாசீனப்படுத்திவிட்டு எச்சருக்கையினமையாக இருந்த காரணத்தினால், செப்டம்பர் 4-ம் தேதி அவருக்கு கடுமையான வலி மீண்டும் ஏற்பட்டுள்ளது. உறவினர்கள் அவரை அங்கிருந்த ஒரு மருத்துவமனையில் காட்ட, அவர்களோ பரிசோதித்துவிட்டு உடனடியாக மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்ல அறிவுறுத்தினார்கள். அதன்படி அன்றைய தினம் மாலை 4 மணியளவில் மதுரையில் உள்ள வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சையளித்த மருத்துவர்கள், அவரின் உடல்நிலை மிக மோசமாகி வருவதாக தகவல் கொடுத்தனர்.
இறுதியாக செப்டம்பர் 5, 2024 அன்று அதிகாலை 5 மணிக்கு அந்த சிம்மல்குரல், தனது 60 வயதில் அனைத்து சப்தங்களையும் நிறுத்தியது. சதா காலம் மூச்சுக்கு முந்நூறு முறை தேவர் நாமத்தை கூறிய அவரின் மூச்சு நின்று போய் இருந்தது. அந்த மஞ்சள் துண்டு மண்ணில் விழுந்துவிட்டது. என்னைத் தேவரைத் தவிர எவனும் ஒழிக்க முடியாது என்ற அவருடைய கூற்று உண்மையாகிப் போய்விட்டது. மாவீரன் சண்முகையா பாண்டியனின் இறப்பு யாருமே நினைத்துக்கூட பார்க்காத நிலையில் பேரிடியாக அன்று எழுந்த தேவரினத்தவர்களுக்கு முதல் செய்தியாக காதில் வந்து சேர்ந்தது. ஆம் ஓய்வே அறியாத மாவீரன், தேவரின் திருவடியில் நிரந்தரமாக இளைப்பாற சென்றே விட்டார். அவருடைய மரணம் தேவர் சமூகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
சண்முகையா பாண்டியனின் பூத உடலை, அவர் வசித்து வந்த கணக்குப்பிள்ளை வலசைக்கே எடுத்துச் சென்று இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. அனைத்து தலைவர்களும் கண்ணீர் மல்க மாவீரனின் இறுதி யாத்திரையில் கலந்து கொண்டு அவருக்கு இரங்கற்பா தெரிவித்தனர். தலைவர்கள் சிலர் அவரது உடலை புதைத்து மணிமண்டபம் கட்டி வரும் தலைமுறைகளுக்கு அவரது வரலாற்றை பறைசாற்றும் இடமாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ’ஆப்பநாடு என் உயிர்’ என்று கூறியிருந்த மாவீரனின் உடலை ஆப்பநாட்டில்தான் இறுதிச்சடங்கு செய்யவேண்டும் என்றும் கோரிக்கை வலுத்தது. ஆனால் இறுதியில் அவரது குடும்ப வழக்கப்படி அவரது பூத உடல் கணக்குப்பிள்ளை வலசையிலேயே எரியூட்டப்பட்டது.
1998 காலகட்டங்களில் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக வந்திருக்க வேண்டியவர். திராவிட அரசியல்வாதிகளின் சூழ்ச்சியாலும் அவருடைய வளர்ச்சி பிடிக்காத தேவரினத்தின் துரோகிகளாலும் வீழ்த்தப்பட்டார். ஆனாலும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்ட அவரை எவரும் அழிக்க முடியாது என்பதே உண்மை. நடமாடும் இராணுவமாக, சிம்மக்குரலோனாக, அனைவரும் அஞ்சி நடுங்கும் அளவிற்கு வாழ்ந்த மாவீரன் சண்முகையா பாண்டியன் போல் இதற்கு முன்னர் எவரும் பிறந்ததும் இல்லை, இனி பிறக்கப்போவதும் இல்லை.
உடலால் இன்று நம்முடன் இல்லாமல் போன மாவீரன் சண்முகையா பாண்டியன், உணர்வால் இந்த உலகம் இருக்கும் வரையில் நம்மோடு எதோ ஒரு ரூபத்தில் வாழ்ந்து கொண்டேதான் இருப்பார். அவரைத் தவிர்த்துவிட்டு தேவரின அரசியலை யாரும் எழுதிவிட முடியாது.
சிம்மக்குரலோன் சண்முகையா பாண்டியனின் பெரும் கனவுகளை நனவாக்குவதும், அதில் வெற்றி கொள்வதுமே நாம் அவருக்கு செலுத்தும் உண்மையான காணிக்கை.
ஆம்! சண்முகையா பாண்டியன் ஒரு சகாப்தம்!
சண்முகையா பாண்டியன் ஒரு சரித்திரம்