தேவர் குருபூஜைக்கு வாகன பாஸ்கள் உரிய நேரத்தில் வழங்க கோரி வழக்கு
அக்டோபர் 30ஆம் தேதி தேவர் குரு பூஜைக்கு செல்லும் வாகனங்களுக்கான பாஸ்களை குறைந்த பட்சம் ஒரு வாரத்திற்கு முன்பாகவே வழங்கவும், முறையான பாஸ்களை கொண்ட வாகனங்களை முதல் நுழைவாயில் வரை செல்ல அனுமதிக்கவும் உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு தொடர்பாக தமிழக காவல்துறை தலைவர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதில்மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த வழக்கறிஞரும், முக்குலத்தோர் புலிப் படை கட்சியின் மாநிலச் செயலாளருமான இரா. முத்துராமலிங்கம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ” 1979 ஆம் ஆண்டு முதல் சுதந்திரப் போராட்ட வீரரான பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்த தினம் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30-ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தேவர் குருபூஜையை முன்னிட்டு தென் தமிழகத்தை சேர்ந்த பெரும்பாலான மக்கள் பசும்பொன் கிராமத்திற்கு சென்று மரியாதை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அன்றைய தினம் பசும்பொன் கிராமத்திற்கு செல்லும் வாகனங்களுக்கான பாஸ் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் நிலையில், பெரும்பாலும் அக்டோபர் 29ஆம் தேதி மாலை, அக்டோபர் 30ஆம் தேதி காலை தாமதமாகவே வழங்கப்படுகின்றது. இதனால் வட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பசும்பொன்னிற்கு வந்த மரியாதை செலுத்துவது இயலாததாகி விடுகிறது.
கடந்தாண்டு முறையாக பாஸ் பெற்ற வாகனங்களை முதல்நுழைவாயில் வரை செல்ல காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. குறிப்பாக கோட்டைமேடு வழியாக வந்த வாகனங்கள் கோட்டைமேடு பகுதியிலேயே நிறுத்தப்பட்டன. அபிராமம் வழியாக வந்த வாகனங்கள் நந்திச்சேரி பகுதியிலேயே நிறுத்தப்பட்டன. இதனால் வயதானவர்ளும், குழந்தைகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். அன்றைய தினம் மரியாதை செலுத்த இயலவில்லை எனில் பெரும் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.
ஆகவே குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு முன்பாக வாகனங்களுக்கான பாஸ்களை வழங்கினால் காவல்துறையினருக்கும் பொது மக்களுக்கும் உதவியாக அமையும். அதேபோல கடந்த ஆண்டுகளைப் போலவே உரிய பாஸ்களை வைத்திருப்பவர்கள் முதல் நுழைவாயில் வழியாக சென்று அங்க வாகனங்களை நிறுத்த அனுமதிக்க வேண்டும். இவை தொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்திக்கான வாகன பாஸ்களை குறைந்த பட்சம் ஒரு வாரத்திற்கு முன்பாகவே வழங்கவும், முறையான பாஸ்களை கொண்ட வாகனங்களை முதல் நுழைவாயில் வரை செல்ல அனுமதிக்கவும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு, “வழக்கு தொடர்பாக தமிழக காவல்துறை தலைவர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.