7-ம் ஆண்டில் நேதாஜி இளைஞர் சங்கம்

2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் ஓர் முழு நிலவு இரவு. இராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூர் என்ற ஊரில், தேவரின இளைஞர்கள் சிலர் ஒன்று கூடுகின்றனர். வழக்கத்திற்கு மாறாக, அன்றைய தினம் அனைவரின் முகத்திலும் கோபம் கொப்பளித்துக் கொண்டிருக்கிறது. பத்து நிமிடங்கள் ஆழ்ந்த நிசப்தத்திற்குப் பிறகு கூட்டத்தில் ஒருவர் பேச ஆரம்பிக்கிறார். அவர் பேச ஆரம்பித்த பிறகு அடுத்தடுத்து இளைஞர்கள் ஒரு சீரியஸான விஷயத்தைப் பற்றி விவாதிக்கிறார்கள். தாங்கள் கடந்த சில மாதங்களாக மாற்று சமூக இளைஞர்களால் பிரச்சினைகளை எதிர்கொள்வதைப் பற்றி  விவாதிக்கிறார்கள். விவாதம் நடு இரவைக் கடந்தும் தொடர்கிறது. இரவின் குளிரை இளைஞர்களின் கோபம் வெப்பமாகி வென்று கொண்டிருக்கிறது. எந்தவித முடிவும் எட்டாமல் அந்த இளைஞர் கூட்டம் அன்று கலைந்து சென்றுவிடுகிறது.

அதன் பிறகும் பார்த்திபனூரில் உள்ள மருதுபாண்டியர் நகர், பட்டரைத் தெரு மற்றும் புதுத் தெருவில் உள்ள தேவரின இளைஞர்கள் பலருக்கு தொடர்ந்து பிற சமூக சாதிவெறியர்களோடு முட்டலும், மோதலும் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது. மீண்டும் புதுத் தெருவின் முட்காட்டில் அதே இளைஞர்கள் ஒன்று கூடுகின்றனர். தற்போது மேலும் சில இளைஞர்கள் அவர்களுடன் சேருகின்றனர். கூட்டம் தொடங்குகிறது. தங்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைவரின் ஒருமித்த குரலாக அந்தக் கூட்டத்தில் இருக்கிறது. தனித்தனியாக இருப்பதே தற்போதைய சூழ்நிலைக்கு முழுமுதற் காரணம் என விவாதிக்கப்படுகிறது. எனக்கு வரும் பிரச்சினை, நாளை உனக்கும் வரும் என்று கூட்டத்தில் ஒருவர் கூறுகிறார். என் பிரச்சினை, உன் பிரச்சினை என்று எப்போது நினைக்கிறோமோ அன்றுதான் இதற்கு விடிவுகாலம் என்று மூலையில் உட்கார்ந்திருந்த பாலகன் ஒருவன் கூறுகிறான். இதற்கு என்னதான் தீர்வு என்று ஒருவர் கேட்க, நாம் ஒன்றுபட வேண்டும், நமக்கென ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என மூத்த இளைஞர் ஒருவர் அறிவுரை கூறுகிறார். 

கூட்டம் காரசாரமாக செல்கிறது. பிரச்சினைகளை சந்திக்க கூடிய கூட்டம் தற்போது தேவரின வளர்ச்சி, பண்பாடு, வரலாறு என பயணம் செய்து, சர்வதேச அரசியல் வரை விவாதிக்கும் அரசியல் களமாக மாறுகிறது. இது கூடியிருந்த இளைஞர்கள் பலருக்கும் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஒருசேர உருவாக்குகிறது.

அந்த நேதாஜியின் பிள்ளைகள் அனைவரும் ஒருமனதாக தங்களுக்கு என ஒரு சங்கத்தை உருவாக்க வேண்டும் என முடிவு செய்கிறார்கள்.  அந்த சங்கம் தங்களது பாதுகாப்பு, வளர்ச்சி, அரசியல், சமூகப்பணிகளுக்கு வித்திடும் என ஆணித்தரமாக நம்புகிறார்கள். என்ன பெயர் வைக்கலாம் என வினவ, ஆதியில் இருந்து நாம், வேல் கம்புகளோடு, வாழ்ந்தாலும் – வீழ்ந்தாலும் தேசத்தந்தை நேதாஜியின் வழியில் அவரின் கொள்கைகளை இன்றுவரை பின்பற்றிக் கொண்டிருக்கிறோமே, அவரின் பெயரை விட்டு வேறு ஏதும் யோசிக்க அவசியமா என்று கூற கூட்டம் ஆர்ப்பரிக்கிறது.

ஆம் அந்த இளைஞர் கூட்டம் தங்களுக்கென ஒரு சங்கத்தை உருவாக்கி அதற்கு ‘நேதாஜி இளைஞர் சங்கம்’ என்று பெயர் சூட்டுகின்றனர். உறுப்பினர்கள் அனைவரும் செல்லப்பாண்டி என்பவரை தலைவராகவும், கர்ணன் என்பவரை செயலாளராகவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கிறார்கள்். சங்கத்திற்கான கொள்கைகள், துணை விதிகள் உருவாக்கப்பட்டு சங்கத்தை 23.11.2018 அன்று தமிழ்நாடு சங்க விதிகளின் படி, முறையாக பதிவு செய்யப்படுகிறது (பதிவு எண்.212/2018).

அதன் பிறகு ஆரம்பித்த நேதாஜி இளைஞர் சங்கத்தின் பயணம், இன்றுவரையில் எந்தவித சமரசமும் இல்லாமல் தொய்வின்றி தொடர்கிறது. இடையில் தினேஷ்குமார் தலைமையேற்று வழிநடத்த, தற்போது இந்த மாபெரும் இயக்கத்திற்கு தலைவராக வழக்கறிஞர் பசும்பொன் செ.முத்து பொறுபேற்றிருக்கிறார்.

வழக்கறிஞர் பசும்பொன் செ.முத்து பொறுப்பேற்ற பிறகு நேதாஜி இளைஞர் சங்கத்தை தமிழ்நாடு முழுவதும் கொண்டு சென்றார். இந்த தன்னலமற்ற இயக்கம் வெறு ஒரு பகுதியில் சுருங்கிவிடக் கூடாது, இதன் பலன்கள் தமிழநாடு முழுவதும் உள்ள கோடான கோடி தேவரின மக்களை குறிிப்பாக இளைஞர்களைச் சென்றடைய வேண்டும் என முடிவெடுத்து இந்தச் சங்கத்தை அனைத்து பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்கிறார்.

அதன் பிறகு இரு மடங்கு வேகத்தில் ஆரம்பித்த நேதாஜி இளைஞர் சங்கத்தின் பயணம்,  இன்று வரை நிற்காமல் இரவு பகலாக தேவரின மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருப்பதை வரலாறு பறை சாற்றும். இது தொடாத பிரச்சினைகளும் இல்லை, விஷயங்களும் இல்லை. தேவரினத்தின் வளர்ச்சி, ஒற்றுமை, பண்பாடு, வரலாறு, நீதிமன்றத்தில் வழக்கு, சட்ட உதவிகள் என 24×7 மணி நேரமும் இதயம் துடிப்பதைப் போல தேவரினத்திற்காக துடித்துக் கொண்டே இருக்கிறது.

எழுத்தே அயுதம் என்னும் கோட்பாட்டை முன்னிறுத்தும் நேதாஜி இளைஞர் சங்கம், தேவரினத்தின் அனைத்துப் பிரச்சினைகளையும் சட்டப்பூர்வமான வழிகளில் தீர்க்கமுடியும் என்று நம்புகிறது. இது அனுப்பிய மனுக்களை ஒரு சேர நிறுத்தினால் மலையும் மடுவாகத் தெரியும். தேவரினத்தின் எண்ணற்ற பிரச்சினகளுக்கு தீர்வைக் கேட்டு தனது எழுத்தின் மூலம் அதிகார வர்கத்தை தட்டி எழுப்பியது.

இதன் துணை அமைப்பான முக்குலத்தோர் சட்டப் பாதுகாப்பு மையத்தின் மூலம் மனித உரிமை பிரச்சினைகளை தட்டிக் கேட்கிறது. புரட்சி நிகழ பொருளாதரமும் அவசியம் என தன் சங்கத்தில் சேர்வதற்கு உறுப்பினர் கட்டணத்தை கராறாக வசூலித்து அதை சமூகப் பணிகளுக்கு பயன்படுத்துகிறது. இன்றைய தேதியில் காசு கொடுத்து சேரும் ஒரே இயக்கமாக நேதாஜி இளைஞர் சங்கம் உருவெடுத்து தேவரினம் மத்தியில் நம்பிக்கை விதையை விதைத்துள்ளது.

தேவரினம் ஊடக பலம் இல்லாமல் இருப்பதைக் கண்டு இந்த இனத்திற்காக பிரத்யேகமாக ’நாம் தேவர்’ என்ற மாத இதழை சென்ற அக்டோபர் மாதம் தொடங்கி நடத்தி வருகிறது. பொருளாதர சிக்கலினால் தற்போது இணையதளம் வாயிலாக இதழை நடத்தினாலும், எதிர்காலத்தில் நிச்சயமாக அச்சு ஊடகத்தை நாம் தேவர் அடையும் என நம்பிக்கையுடன் உள்ளது.

காலச் சக்கரம் விரைவாக சுழன்று கொண்டிருப்பதை, இந்த இயக்கம் ஆரம்பித்து ஆறு வருடங்கள் கடந்ததை வைத்துதான் கணக்கிட முடிகிறது. இத்தகைய சிறப்பு மிக்க நேதாஜி இளைஞர் சங்கம் தற்போது 23.11.2024 அன்று தனது 7-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறது.

இன்னும் நீண்ட நெடிய தூரம் நமது பயணம் பயணப்பட வேண்டியுளது. நிர்வாகிகள், உறுப்பினர்கள், போராளிகள் என அனைவரும் இந்த மாபெரும் இயக்கத்தை நமக்கு பின்பும் நிலைத்து நிற்க வேண்டிய பணிகளை பழுதடையாமல் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இந்த தருணத்தில் உங்கள் அனைவரின் அன்பையும், ஆதரவையும் உரிமையுடன் எதிர்பார்க்கிறோம். ஒன்றுபடுவோம்! வென்று காட்டுவோம்!

ஜெய்ஹிந்த்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *