மீண்டெழும் தேவரினத்திற்கு …. வெற்றி தூரமில்லை!

தேவரினம் இந்த ஒற்றைச் சொல், சுதந்திரத்திற்குப் பிறகும், கடந்த 60 ஆண்டுகளாக தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக அரசியலிலும், அதிகாரத்திலும் கோலோச்சியது. எங்கும் தேவர், எதிலும் தேவர் என்றிருந்த இந்த பெருமைமிகு சமூகம், 2000-ம் ஆண்டு வாக்கில், தனது அடையாளங்களை மெல்ல மெல்ல இழக்கத் தொடங்கியது. தமிழகத்தில் நடந்த அரசியல் மாற்றங்கள் மற்றும் தேவரினத்திற்கு எதிராக கட்டமைக்கப்பட்ட புனைவுக் கதைகள் போன்றவை ஊடக பலமில்லாத இச்சமூகத்தை பொதுச் சமூகங்களின் முன்பாக குற்றவாளியாக முன்னிறுத்தி ஓரங்கட்டியது.

எந்தச் சமூகம், சமூகங்களின் விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து தனது ஆண் சந்ததியரில் சரி பாதியை இழந்ததோ, அதே சமூகத்தின் மீது நன்றி மறந்த நயவஞ்சகர்கள் சேற்றை வாரி வீசினார்கள். அதன் விளைவு, தேவரினம் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய அளவில் பின்னடைவை சந்தித்தார்கள். கூடுதலாக, கட்டுக்கடங்காத  அடக்குமுறைகளும், போலி வன்கொடுமை வழக்குகளும் இச்சமூக மக்களின் வாழ்க்கையை மேலும் புரட்டிப்போட்டது.

அரசியல் களத்தின் மையப் புள்ளியாக விளங்கிய நாம், இன்று அரசியல் ரீதியாக அநாதைகளாக ஆக்கப்பட்டுள்ளோம். திராவிட அரசியலுக்கு தேவரினத்தை ஒரு சேர எதிர்ப்பது இமயமலையை சுத்தியல் கொண்டு உடைப்பதற்கு சமம் என்பதால், திட்டமிட்டு முக்குலத்தோரை மூன்று  கூறுகளாக்கியுள்ளனர். தேவரை-மறவராக்கி, மறவரை-கொண்டையன்கோட்டை மறவர் எனப் பிரித்து, அதையும் ஆப்பநாடு-கிளுவை நாடு என இரண்டாய் கீறி தேவரினத்தின் ஒற்றுமையை நீர்த்துப்போகச் செய்ய சகல முறைகளையும் கையாண்டார்கள். அதற்கு தேவரின துரோகிகள் சிலர் ஒத்து ஊதினார்கள். இவற்றை எதையும் அறிந்திராத தேவரின மக்கள், சதிகாரர்களின் சூழ்ச்சியில் சிக்கி மாற்றானுக்கு வெண்சாமரம் வீசி மகிழ்ந்து கொண்டிருந்ததன் விளைவு, இன்று      என்ன    செய்வதென்றே தெரியாமல், திக்கு தெரியாத காட்டில் திசைக்கொன்றாக அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள். அதிகாரத்தை கைப்பற்ற, பிற சமூகங்கள் தங்கள் உட்சமூகங்களைக் கூட இணைத்துக் கொண்டு ஓரணியில் திரள, முக்குலத்தோரோ, ஒற்றைப் பெயரும் வேண்டாம், ஒன்றிணையவும் வேண்டாம் என தான்தோன்றித்தனமாக செயல்பட்டதன் விளைவு இன்று அரசியல் முதல் அதிகாரம் வரையில் ஓரங்கட்டப்பட்டுள்ளது.

கடந்த    20    வருடங்களாக     பெற்ற கசப்பான அனுபவங்களால், தற்போது தேவரின மக்கள் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில், மிகப்பெரிய எழுச்சியும், தாக்கமும் மீண்டும் உருவாகியுள்ளது. மக்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதையும், ஒரு சிலரின் தனிப்பட்ட சுகபோக நலன்களுக்காக தாங்கள் பகடைக்காய்களாக பந்தாடப்படுவதையும் தற்போது உணரத் தொடங்கியுள்ளனர். இளைஞர்கள் மத்தியில் அதிகார வர்கத்திற்கு எதிராகவும், திராவிட அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் பெரும் கோபமும், பேரெழுச்சியும் உருவாகியுள்ளது.

தாங்கள் அனைத்திலும் தற்போது புறக்கணிக்கப்டுவதை புரிந்து கொண்டதோடு, இங்கு மக்கள் தொகையே அனைத்தையும் நிர்ணயிக்கிறது என்பதையும் அறிந்து கொண்டார்கள். கூடி வாழ்வதே கோடி நன்மை என்பதை இந்த மூவேந்தர் இன மக்கள் தற்போது விளங்கிக் கொண்டார்கள். இச்சமூகத்தில் சிம்மக்குரலோன் சண்முகையா பாண்டியனுக்குப் பிறகு மக்களைத் திரட்டும் தலைவர் யாரும் வராத காரணத்தினால், திசைக்கு ஒருவராக சிதறிக் கிடந்த இம்மக்கள், தற்போது தன்னெழுச்சியாக உருவாகியுள்ள இந்த காற்றாற்று வெள்ளத்தை மீண்டும் தன்னம்பிக்கையுடன் தனிபெரும் பேரினமாக மாற்றுவோம். நமக்கான வெற்றி வெகுதூரத்தில் இல்லை. 

ஜெய்ஹிந்த்!

-பசும்பொன் செ.முத்து  BA.,BL.,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *