சாகா வரம் பெற்ற சண்முகையா பாண்டியன்

29 அக்டோபர் 1963, அதிகாலை 4.50 மணி, அந்த செய்தி பேரிடியாக தமிழக மக்களின் காதில் வந்து விழுகிறது. கடந்த இரண்டு ஆண்டு காலமாக உடல் நலம் இல்லாமல் இருந்த அகில இந்திய ஃபார்வர்ட் ப்ளாக் கட்சியின் தலைவரும், நேதாஜியின் நண்பரும், சிறந்த பேச்சாளருமான தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மதுரையை அடுத்த திருநகரில் தமது 56வது வயதில் காலமானார்.

தேவரின் மரணம், தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பசும்பொன் கிராமத்துக்கு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலம், 30ந்தேதி காலை 11 மணிக்கு புறப்பட்டது. ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக தேவரின மக்களின் நெஞ்சங்களில் சொல்லணாத் துயரம் குடிகொண்டிருந்தது. இந்த இனத்தை காக்க வேறு ரட்சகன் யார் இருக்கிறார்? இனி ஒரு தேவர் பிறந்து வருவாரா என தேவரின மக்கள் தேம்பி தேம்பி அழுது புலம்பிக் கொண்டிருந்தபோது, கமுதியில் இருந்து 90 மைல் தூரத்தில் தென் திசையில், வீரத்திற்குப் பெயர்போன திருநெல்வேலியில் இருந்து 20 மைல் தூரத்தில் கிழக்கு திசையில், நாசரேத் அருகில் மறவன் குறிப்பன்குளம் என்ற ஊரில் பாண்டியர் குலத்தைச் சேர்ந்த மறப் பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக, குழந்தை எப்பொழுது வேண்டுமானாலும் பிறக்கும் என்ற நிலையில் பிரசவ வலியுடன் துடித்துக் கொண்டிருந்தார்.

தெய்வீகத்திருமகன் தேவரை அடக்கம் செய்த ஒரு நாள் கழித்து அஸ்த்தமான சூரியன் மீண்டும் தெற்கே உதித்தது. ஆம்! அம்மறப்பெண் அழகாய் ஒரு ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார்.  ஏழாம்படை முருகப் பெருமான் என அழைக்கப்படும் தேவரே தனக்கு ஏழாவது குழந்தையாய் பிறந்துவிட்டதாக பூரிப்படைந்த அந்த தம்பதியினர், அந்த தெய்வீகக் குழந்தைக்கு முருகப்பெருமானின் பெயரான ’சண்முகன்’ என்பதையும் எதிரிகளை வதம் செய்ய முருகன் உபயோகிக்கும் ’வேலு’ என்பதையும் இணைத்து ”சண்முகவேலு” என்று பெயரிட்டனர். அந்த சண்முகவேலு பிற்காலத்தில் சண்முகப் பாண்டியனாக அவதாரம் எடுக்கப்போகிறார் என்பதை அப்போது எவரும் அறியவில்லை.

சண்முகையா பாண்டியன் பிறப்பு

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் தாலுகா, ஆழ்வார்திருநகரி ஒன்றியத்தில்,, உடையார்குளம் ஊராட்சியில் அமைந்துள்ள மறவன் குறிப்பன்குளம் என்ற ஊரில் சண்முகத்தேவர் – ஆறுமுகம்மாள் தம்பதியினருக்கு தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மறைந்த இரண்டு நாள் கழித்து 1963-ம் ஆண்டு நவம்பர் மாதம், 2ம் தேதி, ஐப்பசி-17, சனிக்கிழமை அன்று சண்முகவேலு என்ற சண்முகையாப் பாண்டியன் ஏழாவது மகனாக பிறந்தார். அவருடன் உடன் பிறந்தவர்கள் ஆறு ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆவர். சண்முகையாப் பாண்டியன் இளைமையிலேயே மிகுந்த துடிப்பும், வீரமும் ஒருங்கே பெற்றவராக திகழ்ந்துள்ளார். மறவன் குறிப்பன்குளத்தில் மறவர் சாதியைச் சேர்ந்த வீடுகள் பதினைந்தே இருந்தாலும், சண்முகையா பாண்டியன் சிறுவயது முதலே அநீதிகளைக் கண்டு பொறுக்க முடியாதவராக இருந்துள்ளார். விளைவு எங்கெல்லாம் அநியாயங்களும், அக்கிரமங்களும் நடக்கிறதோ அங்கெல்லாம் சண்முகையா பாண்டியன் அவற்றை எதிர்த்து முதல் ஆளாக நின்றுள்ளார். பயம் என்பதே தனது பால்ய வயதில் இருந்தே அறியாத பாலகனாக வளர்ந்து வந்துள்ளார். சண்முகையா பாண்டியன், தனது பள்ளிப் படிப்பை நாசரேத்தில் உள்ள எஸ்.டி.ஏ பள்ளியில். படித்தார். எதையும் எதிற்கும் அவருடைய குணம் அவருக்கு அந்த வயதிலேயே பல பிரச்சினைகளை உருவாக்கியது. அதனால் அவரால் பத்தாம் வகுப்பிற்கு மேல்  மேற்கொண்டு பள்ளிப்படிப்பை தொடர இயலவில்லை.

இளமைப் பருவம்

சண்முகையாப் பாண்டியன் இளமையில் இருந்தே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மீது மிகுந்த பற்றும் பக்தியும் கொண்டிருந்தார். தேவர் அவர்களை தன் ஒரே இறைவனாக அவர் கொண்டிருந்தார் என்றால் அது மிகையில்லை. அந்த அளவுக்கு தேவர் மீது உயிராக இருந்தார். மேலும், தேவரின இளைஞனுக்கே இருக்கும் மிடுக்கும், துடிப்பும், சண்முகையா பாண்டியனையும் விடவில்லை. அவர் வளர வளர, அவரைச் சுற்றி பிரச்சினைகளும் வளர்ந்து கொண்டே வந்தது. இதனால் அவருடைய பெற்றோர்கள் அவரை அதே மாவட்டத்தில் 29 மைல் தூரத்தில் உள்ள அவரின் தாயார் ஊரான  மணியாச்சியில் கொண்டு விட்டுள்ளனர்.

ஊரை மாற்றிவிட்டால், ஊமையாகிவிடுவானா சண்முகையாப் பாண்டியன்? உதிரத்திலே கலந்துள்ள அதே வீரம், அங்கும் எதிரொலிக்க, அநீதி இழைப்பவர்கள் அவரைக் கண்டு நடுங்கியுள்ளனர். குறிப்பாக இளைஞன் சண்முகையா பாண்டியனின் கம்பீரமும், கணீர் குரலும் காண்போரை வியக்க வைத்துள்ளது. சாதீய நெருப்பில் தகித்துக் கொண்டிருந்த தூத்துக்குடி மாவட்டத்தில், சண்முகையா பாண்டியன் தனது இளம் வயதிலேயே தேவரின மக்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஆர்வமாக இருந்துள்ளார். சிறிதுகாலம் பக்கத்தில் உள்ள கோவில்பட்டியில் உணவகக் கடை ஒன்றை நடத்தியுள்ளார்.

சமூகப் பயணம்

90களின் காலகட்டம் அது. தென்தமிழகத்தில் சாதீய பதட்டம் மிகுந்திருந்த நேரம். தேவரினத்திற்கென தலைவன் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருந்த  சமயம் அது. சண்முகையா பாண்டியனால் இருப்பு கொள்ள முடியவில்லை. துடிக்கிறார்! துயரப்படுகிறார்! இவரின் இந்நிலையக் கண்ட அவரது குடும்பத்தார், சண்முகையாப் பாண்டியனை தடுக்கின்றனர். சாதிக்காக உன் வாழ்வை கெடுத்துக் கொள்ளாதே என  கண்டித்து அவரின் முயற்சிகளுக்கு அணை போடுகிறார்கள். அணை போட அவர் என்ன அம்பாசமுத்திர மழை நீரா? அவர் சதுரகிரி மலையில் உருவாகிய காட்டாற்று வெள்ளம். காண்போரை எல்லாம் கபளீகரம் செய்யும் அந்த காட்டாற்று வெள்ளத்தின் முன்னால் உறவுகளின் அணை எம்மாத்திரம்?

தென்பகுதியில் தேவரினம் பாதிக்கப்படும் போது அப்பிரச்சினைகளை உரக்கச் சொல்லி உரைப்போர் எவரும் இல்லை என,  தனது உறவினர்களை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு, தான் நடத்திய உணவகக் கடையையும் மூடிவிட்டு, உறவுகளை விட, உணவை விட இன உணர்வே முக்கியம் என சமூக அரசியலில் இறங்குகிறார். ஒரு இனத்திற்கு அதன் அடையாளம்தான் அடிநாதம் என்ற கோடப்பாட்டை உள்வாங்கிக் கொண்ட அவர், அன்றைய தேதியில் பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த தேவரினம், தனது ’பாண்டியன்’ என்ற  பட்டப் பெயரை பயன்படுத்த மறந்து கொண்டிருந்தபோது, தேவரினத்திற்கு முன்னுதாரணமாக இருக்கும் வகையில் தன்னுடைய இயற்பெயரான சண்முகவேலு என்ற பெயரை “சண்முகையா பாண்டியன்” என்று மாற்றி அதை முறையாக அரசு கெஜட்டில் வெளியிடுகிறார்.

தமிழ்நாடு தேவர் பேரவையில் பாண்டியன்

திரு.சீனிச்சாமித்தேவர் தலைமையில் அனறைய காலகட்டத்தில் தேவரின அரசியலில்  மும்முரமாக இருந்த தமிழ்நாடு தேவர் பேரவையில் தன்னை இணைத்துக் கொண்டு தேவரினத்திற்கான தனது சமூக அரசியலைத் தொடங்குகிறார். சண்முகையாப் பாண்டியனின் வேகத்தையும் ஆற்றலையும் கண்ட இயக்க நிர்வாகிகள், அவரை தமிழ்நாடு தேவர் பேரவையின் மாநில இளைஞரணிச் செயலாளராக நியமனம் செய்கின்றனர். நெல்லை மறவர்களுக்கே உரிய அகன்ற முகம், நீண்ட முடி, உருட்டும் விழிகள், முருக்கிய மீசை, ஆஜானுபாகுவான தோற்றம் என சண்முகையாப் பாண்டியன், தேவரின மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே துருவ நட்சத்திரமாக ஜொலிக்க ஆரம்பிக்கிறார். அவருடைய வேகமும், வீரமும், சொற்பொழிவாற்றும் திறமையும் பல லட்ச இளைஞர்களை தன்பால் ஈர்த்து சமூகத்திற்கான விடிவெள்ளியாக உருவெடுக்கிறார். நெல்லையில் துவங்கிய புயல், சுழன்று சுழன்று ஆப்பநாட்டிற்குள் நுழைகிறது. புயலானது தற்போது சூறாவளியாக உருமாற்றம் அடைந்து ஆப்பநாட்டை மையம் கொள்கிறது. சண்முகையாப் பாண்டியன் எங்கு சென்றாலும் மக்கள் வெள்ளம் அலைகடலென திரள்கிறது. அவரின் உரை எனில் அன்றைய பொழுது அனைவருக்கும் அற்புதம் நிகழ இருக்கும் நாளாகிப்போனது. சண்முகையாப் பாண்டியனின் பொதுக்கூட்டம் நடக்கிறது எனில் கூட்டம் நடைபெறும் அந்த ஊரே திருவிழாக் கோலத்தில் காணப்படும். தேவரின மக்களின் மத்தியில் புதைந்து போய்க்கொண்டிருந்த புரட்சிக்கு புத்துயிர் கொடுத்தார். சண்முகையாப் பாண்டியனின் புகழ் பட்டி தொட்டியெல்லாம் பரவியது.

தேவர்குல கூட்டமைப்பின் தோற்றம்

தேவரினத்தில் யார் புகழ் பெறுகிறார்களோ, அவர்களைச் சுற்றி வஞ்சகமும், சூழ்ச்சியும் மிகவிரைவில் நெருங்கிவிடும் என்பது தேவரினத்தின் சாபம். அது சண்முகையாப் பாண்டியனையும் விட்டுவிடவில்லை. அவரின் வளர்ச்சி பிடிக்காத சிலர், பசும்பொன் தேவரைப் போலவே, அவரையும் பொய்யாக ஒரு கொலை வழக்கில் சேர்க்கின்றனர். அக்கொலை வழக்கில் ஜாமீனில் வந்த சண்முகையாப் பாண்டியன், கண்டிஷன் பெயிலில் கையெழுத்திட தென்காசி தினமும் சென்றுவர வேண்டியிருந்தது, எனவே இதைத் தவிர்க்க சண்முகையாப் பாண்டியன், 2000-மாவது ஆண்டில், அன்றைய திருநெல்வேலி மாவட்டம், தென்காசியில் உள்ள மேலமாசி வீதியில் குடியேறினார். இதற்கிடையில் அவருக்கு திருமணமாகி ஒரு ஆண், இரண்டு பெண் குழந்தைகள் பிறக்கின்றன. பிற்பாடு, 2009ம் ஆண்டு, தனது மனைவி ஊரான அன்றைய திருநெல்வேலி மாவட்டமும், இன்றைய தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகாவில் உள்ள கணக்குப்பிள்ளை வலசை என்ற ஊரில் குடியேறுகிறார்.

தொடர்ந்து, 1998ம் ஆண்டு தமிழ்நாடு தேவர் பேரவையில் நடைபெற்ற இளைஞரணித் தேர்தல் விஷயத்தில் நடந்த பிரச்சினகளால், தவிர்க்க முடியாத காரணங்களால், சண்முகையாப் பாண்டியன் பேரவையில் இருந்து வெளியேறி, தனியே ‘தமிழ்நாடு தேவர்குல கூட்டமைப்பு’ என்ற இயக்கத்தை ஆரம்பித்து அதன் நிறுவனத் தலைவராகிறார்.

பொதுக்கூட்டங்கள்

தமிழ்நாடு தேவர்குல கூட்டமைப்பை ஆரம்பித்த பிறகு மாவீரன் சண்முகையாப் பாண்டியன், இருமடங்காக தனது சூறாவளி சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கிறார். பல பொதுக்கூட்டங்கள், பல மேடைகள் பார்ப்போரை பரவசப்படுத்துகிறது. கூடியிருக்கும் கூட்டத்தைப் பார்த்து தனது சிம்மக்குரலில் மணிக்கணக்கில் எந்தவித குறிப்புகளும் இல்லாமல் அவர் பேசுவதைப் பார்த்து வியந்தவர்கள் பலர். இதைக் கண்ட மக்கள் அவரை ‘சிம்மக்குரலோன்’ என்று அழைக்கலாயினர். தமிழகத்தில் குறிப்பாக தென்தமிழகத்தில் அவர் போகாத இடம் இல்லை, அவர் கால் தடம் பதிக்காத பகுதிகள் இல்லை எனலாம்.

மதுரையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், சண்முகையாப் பாண்டியன் அன்றைய தேதியில் மதுரையில் அதிகாரம் செலுத்திக் கொண்டிருந்த திராவிட கட்சியச் சேர்ந்த அரசியல்வாதியை குறிப்பிட்டு, இந்த சண்முகையாப் பாண்டியன், மதுரையில் இந்த ஹோட்டலில்தான் தங்கியிருக்கிறேன். திராணி இருந்தால் நேருக்கு நேர் சந்திக்கத் தயாரா? என்று பகிரங்கமாக சவால் விட்டதைப் பார்த்து மிரண்டு போகாத அன்றைய அரசியல்வாதியே இல்லை என்பார்கள் விவரமறிந்தவர்கள்.

”அரசியலை புரட்டிப்போட வேண்டுமானால், இந்த சண்முகையாப் பாண்டியன், ஒரு மாவட்டத்திற்கு ஒரு மணி நேரம் பேசினால் போதும், என்ற அவரது கர்ஜனையை வெறும் அதீதமான தன்னம்பிக்கை என்று சுருக்கிவிட முடியாது என அன்றைய மக்களுக்கு நன்கு தெரியும். ஏனெனில் தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்குப் பிறகு, மக்களைத் திரட்டும் அளப்பரிய ஆற்றல் சண்முகையாப் பாண்டியன் என்ற ஒருவரிடம் மட்டும்தான் இருந்தது. ’என் இனத்திற்கு ஒரு பங்கம் வருகிறபோது, அதைச் செய்தவன் எவ்வளவு பெரிய அரசியல்வாதியாக இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் சரி அவர்களை எதிர்த்து என் குரல் சிம்மக்குரலாக ஒலிக்கும்’ என்று தேவரினத்திற்கு எதிராக செயல்படுபவர்கள் மீது கடும் எச்சரிக்கை விட்டதை காலங்கள் மறைந்தாலும் அதை மக்களால் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அவரது குரல், தேவரினத்திற்கு பாதுகாப்பு அரணாக விளங்கியது.

‘எம்பெருமான்! நான் அனுதினமும் வணங்கும் எல்லாம் வல்ல இறைவன், ஏழாம்படை முருகன், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்’ என்று கூறி அவர் பேச ஆரம்பித்தால், அர்ப்பரிக்கும் கூட்டத்தின் ஓசை அவர் பேசி முடிக்கும் வரையில் அடங்காது. சண்முகையாப் பாண்டியனின் குரல் ஒலிநாடாக்களில் பதிவு செய்யப்பட்டு பட்டிதொட்டியெல்லாம் பரப்பப்பட்டது. அவரது பதிவு செய்யப்பட்ட பேச்சுக்கள் அடங்கிய கேஸட்டுகள் கிராமங்கள் தோறும் ரேடியோக்களிலும், ஒலிபெருக்கியிலும் ஒலிபரப்பும்போது அவை மக்கள் மத்தியில் ஏற்படுத்திய அதிர்வுகளை அவ்வளவு எளிதில் யாராலும் விவரித்துவிட முடியாது.

”நீ சரியா இல்லை, உன்னுடைய கரங்களில் இருந்து வேல் பறிக்கப்பட்டுள்ளது. உன் இடையில் இருந்த வால் பறிக்கப்பட்டுள்ளது. சட்டம் பழிவாங்குகிறது, அரசு ஓரவஞ்சகம் செய்கிறது. அயோக்கிய அரசியல்வாதிகள் உன்னை அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டுகிறான். விழித்துக்கொள்! பழையபடி தேவமாராய் ஆகிவிடு” என்று அன்றே தேவரினத்திற்கு எதிராக நடக்கும் சதிச்செயல்களை அம்பலப்படுத்தி தனது இன மக்களை எச்சரிக்கை செய்தார். சண்முகையாப் பாண்டியனின் அனல் பறக்கும் பேச்சு மற்றும் இந்த அசுர வளர்ச்சியினால் அவருக்கு அரசியல்வாதிகள் மற்றும் பிற சாதி மக்கள் மத்தியில் மட்டுமல்ல, தேவரினதிற்குள்ளேயே எதிரிகள் அதிகமாயினர், சண்முகையாப் பாண்டியனை வீழ்த்திவிட எதிரிகளும், துரோகிகளும் சமயம் பார்த்து காத்திருக்கத் தொடங்கினர்.

ஆனால் சண்முகையாப் பாண்டியனோ, நான் மூவாசம் முற்றும் துறந்த, தென்னாட்டுத் திலகர், தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆசி பெற்றவன். என்னை வழி நடத்துவது தேவர். எனவே அந்த இறைவனைத் தவிர, இந்த சண்முகையாப் பாண்டியனை அரசோ, அரசியல்வாதியோ என எந்த சக்தியாலும் வீழ்த்திவிட முடியாது என கர்ஜித்தார்.

தேவர் மீதும் தேவரினத்தின் மீதுமுள்ள பற்றும்

அனுதினமும் தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரைப் பூஜித்துக் கொண்டே இருப்பார். தேவர் நாமம் தொழாத நாளே இல்லை எனலாம். அந்த அளவு தேவர் மீது பற்றும் பக்தியும் கொண்டிருந்தார். எந்த பொதுக்கூட்டத்திலும் தேவரின் புகழ் பாடாமல் உரைய தொடங்கவே மாட்டார். பசும்பொன் கோவிலுக்குள் மனச் சுத்தம் மற்றும் அகச் சுத்தத்தோடு வர வேண்டும் என்பார். தேவர் கோவிலுக்குள் கடந்த காலத்தில் சிலர் நடத்திய அரசியல் சண்டைகளை அறவே வெறுத்தார். இது கோவில். இங்கு வருபவர்கள், சாமி கும்பிட மட்டுமே வர வேண்டும். உங்கள் நாடகங்கள் மற்றும் சண்டைகளை பசும்பொன்னுக்கு வெளியே வைத்துக் கொள்ளுங்கள், மீறினால் அப்படி நடப்பவர்களுக்கு நானே கடைசி முடிவு எடுக்க வேண்டியது வரும் என்று கடுமையாக எச்சரித்ததன் மூலம், அவர் பசும்பொன் கோவிலை எவ்வளவு புனிதமாக நெஞ்சில் ஏற்றி வைத்திருந்தார் என்பது புலப்படும். சென்னையில் நந்தனம் தேவர் சிலை திறப்பு விழாவிற்கு நூற்றுக்கணக்கான இளைஞர்களை தன்னுடன் அழைத்துச்் சென்றார். தேவரைப் போலவே நீண்ட ஜிப்பா அணியும் பழக்கம் சண்முகையாப் பாண்டியனுக்கு இருந்தது.

தேவர் தேசியத்தையும், தெய்வீகத்தையும் தனது கொள்கைகளாக கொண்டிருந்தார் என்றால், சண்முகையாப் பாண்டியனோ தேவரிடம் இருந்து சிறிது மாறுபட்டு, தேசியமும், சாதியும் என்றார். அவர் பசும்பொன் தேவரை எவ்வளவு நேசித்தாரோ, அதில் எள் முனையளவும் குறையாமல், தான் பிறந்த சமூகத்தையும் நேசித்தார். தேவரினத்தின் வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் ஒற்றுமைக்காக தன் வாழ்நாள் முழுவதும் உழைத்தார். தன் வாழ்க்கையையே தன்னை நம்பிய தேவரினத்திடம் ஒப்படைத்தார். தேவர் சமுதாயத்திற்கு ஒரு பாதிப்பு எனில், என் உடம்பில் ஒரு சொட்டு இரத்தம் இருக்கும் வரை போராடுவேன் என்று தன் உயிரினும் மேலாக தன் மக்களை நினைத்தார்.

தான் நெல்லையில் பிறந்திருந்தாலும், தன் உயிர் ஆப்பநாடு என்றும், முக்குலம் தன் உடல் என்றும் உறுதியுடன் உரைத்தார். சண்முகையாப் பாண்டியன் தென் தமிழகத்தில் தேவரினம் மத்தியில் பண்பாட்டு அடையாள அரசியலை முன்னெடுத்தார். தேவரினத்தவர்கள் மஞ்சள் துண்டு அணிய வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலத்தோர் அனைவரும் ஒருவருக்கொருவர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ஒற்றுமையை மிகத் தீவிரமாக தேவரின மக்களிடையே வலியுறுத்தி வந்தார். “நாய், பன்றிகளுக்குக் கூட இரத்தம் சிவப்பாகத்தான் உள்ளது. அதற்காக அவைகளுடன் உறவு வைத்துக் கொள்ளவா முடியும்” என்ற அவரது சினம் கொண்ட கேள்வியின் மூலம் இனக்கலப்பை அவர் எந்த அளவிற்கு எதிர்த்தார் என்பதையும் நாம் உணரமுடியும்.

(மீதி கர்ஜனை அடுத்த இதழில் தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *