தேவரின் முதல் முழக்கம்
ஒருவன் இருந்தாலும், மறைந்தாலும், அவன் பெயரை ஊர் சொல்ல வேண்டும்’ என்ற சான்றோர் வாக்கிற்கிணங்க, வாழ்ந்து மடிந்த மகான்கள் எண்ணற்றோர்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை பிறக்கும் அற்புத குழந்தை பெரும் தாக்கத்தை இந்த உலகத்தில் ஏற்படுத்தும் என்பார்கள். அப்படி பிறந்த ஒரு ஒப்பற்ற பிள்ளை, பிற்காலத்தில் தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவுக்கே ஒரு கலங்கரை கோபுரமாக இருந்தது என்றால் அது மிகையாகாது.
‘நினைக்கும்போதே வணங்கத் தூண்டும் மகா உத்தமத் தலைவர்! ஆயிரம் வருடங்களுக்கு முன்பும் சரி, பின்பும் சரி, அவர் மாதிரி நிறைவான தலைவரை நாடு உண்டாக்கியதுமில்லை. உண்டாக்கப் போவதுமில்லை! என்று முன்னாள் முதலமைச்சர் திரு. எம்.ஜி . ராமச்சந்திரன் வியந்து குறிப்பிட்ட, ஒரு உன்னத தலைவரைக் குறித்து தான் நாம் இக்கட்டுரையில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
சில ஊர்கள் பெரிய தலைவர்களையோ அல்லது நல்ல கலைஞர்களையோ கொடுத்து, தனக்கு பெருமை தேடிக் கொள்கின்றன. அந்த வகையில் பசும்பொன் என்ற அந்த சிறிய கிராமம், தெய்வீகத்திருமகனார் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் என்ற உயர்ந்த மனிதரை இந்த உலகுக்கு கொடுத்து, தனக்கு பெருமை சேர்த்துக் கொண்டது என்றால் மிகையாகாது.
சாயல்குடியில் தேவர்
1933 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் நாள், பவ வருடம் ஆனி
மாதம் 6ம்் தேதி, இராமநாதபுரம்
மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம், சாயல்குடி மறவர் இலந்தைகுளம் கிராமம் பெரிய தனக்காரர், க.சின்ன உடையார் தேவர் வீட்டில், இரண்டு வாரம் சமுதாய பெருந்தகையாளர்களுக்கு விருந்தோம்பல் நடைபெற்றது. அப்போது அரசியல்,பண்பாடு, பகுத்தறிவு, இறையாண்மை, இன்னோரன்ன தலைப்புகளில் கலந்துரையாடல்கள் பல நடைபெற்றது.
அவ்வாறு தங்கியிருந்த காலத்தில் பசும்பொன் தேவர் அவர்களுடன் பங்கேற்ற பெரிய தனக்காரர்களாகிய பொந்தம்புளி காங்கு சேர்வை, பிள்ளையார்குளம் பெருமாள் தேவர், சாயல்குடி சேதுராமன் செட்டியார், சித்திரங்குடி முன்சீப் சுப்பிரமணியம் சேர்வை, கொக்காடி திரு.கந்தசாமி தேவர் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.
தேசபக்தரான சாயல்குடி சேதுராமன் செட்டியார் என்பவர் சாயல்குடியில் தனக்கு சொந்தமான இடத்தில், மக்களுக்கு பயனளிக்கும் வகையில் சுவாமி விவேகானந்தர் வாசக சாலை ஒன்றை நிறுவி நடத்தி வந்தார். அவ்வாசக சாலையின் முதலாம் ஆண்டுவிழா 1933ம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் தேதி அன்று நடத்த திட்டமிட்டு அதற்குரிய ஏற்பாடுகளை வெகு சிறப்பாக செய்து கொண்டிருந்தார்.
வாசக சாலையின் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு சொற்பொழிவாற்ற பல அறிஞர்் பெருமக்களை சேதுராமன் செட்டியார் ஆர்வமுடன் அழைத்திருந்தார். அதில் சுவாமி விவேகானந்தர் படத்தை திறந்து வைத்து சொற்பொழிவாற்ற மதுரை கிருஷ்ணசுவாமி பாரதியார் என்பவரை சிறப்பு அழைப்பாளராகவும் அழைத்திருந்தார்.
விழாவிற்கு அனைவரும் வந்திருந்த நேரத்தில், சிறப்புரை ஆற்றுவதற்காக அழைக்கப்பட்டிருந்த பேச்சாளர் கிருஷ்ணசுவாமி பாரதியார் மட்டும் என்ன காரணத்தாலோ விழாவிற்கு வர இயலாமல் போனது. இதைக்கண்டு மிகுந்த கவலையில் ஆழ்ந்த சேதுராமன் செட்டியார் தன்னுடைய நண்பர்களிடம், விழாவில் பேசுவதற்கு தகுதியான வேறு நபரை அடையாளம் கண்டறியும் படி கேட்டுக்கொண்டார்.
அதன்படி அவருடைய நண்பர்கள் பசும்பொன்னை சேர்ந்த முத்துராமலிங்கத் தேவர்் என்பவர், நல்ல ஞானம் உள்ள பேச்சாளர் என்றும், பல உள்ளூர் பிரச்சனைகளில் அவர் திறமையாக பேசி தீர்வுகளை சொல்லக்கூடியவர் என்றும் அவரை விழாவிற்கு பேச வருமாறு அழைக்கலாம் என்றும் சேதுராமனுக்கு அறிவுரை கூறினார்கள். முதலில் அவர் மிகவும் தயங்கினார். ஏனென்றால், புதிதாக ஒருவரை அதுவும், மேடைகளில் பேசி அனுபவம் இல்லாதவரை, இந்த விழாவிற்கு அழைத்து பேசச் சொல்லுவது, சரியாக வருமா என்ற குழப்பம் அவருக்குள் இருந்தது. இறுதியில் வேறு வழியின்றி அவர் முத்துராமலிங்கத் தேவரை அழைக்க முடிவு செய்தார்்.
சாயல்குடி மறவர் இலந்தைகுளம் என்னும் ஊரில்், ஒரு உள்ளூர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக தேவர் அந்நேரம் அங்கு வந்திருந்தார். அவர் அங்கிருக்கும் தகவலை அறிந்து கொண்ட சேதுராமன் செட்டியார், அவரை அணுகி, தான் அமைத்துள்ள விவேகானந்தர் வாசக சாலைக்கு மறுநாள் ஆண்டு விழா என்றும் விவேகானந்தரின் திருவுருவ படத்தைத் திறந்து வைக்க அழைக்கப்பட்ட மேதை மதுரை கிருஷ்ணசுவாமி வர முடியாததால் தாங்கள் வந்து திறந்து வைத்து சொற்பொழிவு ஆற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
உண்மையில் தேவருக்கு சுவாமி விவேகானந்தர் மீது அளவற்ற பக்தியும், பற்றும் இருந்தது. சுவாமி விவேகானந்தரை அவர் ஏற்கனவே ஆன்மீக குருவாக உள்ளத்தில் ஏற்றிருந்தார். வந்தவர்கள் அவரது திருவுருவப்படத்தை திறந்து வைத்து அவரை குறித்து சிறப்புரையாற்ற வேண்டும் என்று கேட்டதும், சிறிது கூட யோசிக்காமல் உடனே வருவதாக கூறி, அவர்களுடன் சாயல்குடிக்கு கிளம்பிச் சென்றார் தேவர். தேவர் அவர்களுக்கு அப்பொழுது 25 வயது.
தேவரின் முதல் சொற்பொழிவு
நாள்: 26.03.1933
சாயல்குடியில் இருந்த மைதானம், மக்கள் கூட்டத்தால் நிரம்பி இருந்தது. மதுரை கிருஷ்ணசுவாமியின் பேச்சை கேட்பதற்காக, மக்கள் ஆர்வத்தோடு வந்து ஏமாற்றம் அடைந்திருந்தாலும், ‘முத்துராமலிங்கத் தேவரின் பேச்சு எப்படி இருக்கிறது என்பதை கேட்டுத்தான் பார்ப்போமே?’ என்ற எண்ணத்தில் கலையாமல் காத்திருந்தார்கள். இவ்வளவு சிறிய வயதில் விவேகனந்தரைப் பற்றி என்ன பேசப் போகிறார் ? என்று சிலர் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.
மேடையில் ஏறி தன் முதல் கன்னிப் பேச்சை. “விவேகானந்தரின்் பெருமை” என்ற தலைப்பில், தேவர் பேச ஆரம்பித்தார். மடைதிறந்த வெள்ளம் போல் விவேகானந்தரைப் பற்றிய விஷயங்களும் அவரது தத்துவங்களும், மேன்மையான விஷயங்களும் முத்து முத்தாக அவரது நாவிலிருந்து பொழிந்தன.
ஒரு ஆண் சிங்கம், காடு அதிரும்படி செல்வது போல, அவருடைய பேச்சு அன்று அமைந்திருந்தது. விவேகானந்தர் நிற்கிறார் என்றால் அந்த காட்சி கேட்பவர்களின் மனதிற்குள் விரியும் படியும், விவேகானந்தர் பேசினார் என்றால், அவரது பேச்சு ஒவ்வொருவர் காதுக்குள்ளும் எவ்வாறு எதிரொலிக்குமோ? அது மக்களின் கண்களில் விரிவது போலவும், பசும்பொன்னாருடைய பேச்சு அமைந்திருந்தது. கேட்பவர்கள் இதயம் பரவசத்தில் நிறைந்தது. அழுத்தம் திருத்தமாக ஒவ்வொரு வார்த்தையையும் அவர் உச்சரித்து பேசியதை கேட்ட மக்கள், ஆனந்தத்தில் திளைத்தார்கள். தேவருடைய பேச்சில் ஆன்மீகமும் அரசியலும் கலந்து இருந்தது. தனக்கே உரிய தமிழ் நடையில் சிறந்த சொற்பொழிவு ஆற்றினார்.
பத்து நிமிடங்களாவது பேசும்படி கேட்டுக் கொண்டவர்கள் ஆனந்த அதிர்ச்சி அடையும் வண்ணம் மூன்று மணிநேரம் பேசி்முடித்தார். சுவாமி விவேகானந்தரை பற்றி முத்துராமலிங்க தேவர் ஆற்றிய அந்த உரை தான், தேவருடைய முதல் மேடைப் பேச்சாகவும், கன்னிப் பேச்சாகவும் அமைந்தது.
சாயல்குடி சுவாமி விவேகானந்தர் வாசகசாலை, கொடுத்த அந்த மேடையை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அற்புதமாக பயன்படுத்திக் கொண்டார். அவரது பேச்சாற்றல் சுற்று வட்டாரம் எங்கும் பிரபலமானது. விழா முடிந்த பிறகு தேவரின் அருகில் வந்து, அவரது கரங்களை பற்றிக் கொண்ட சேதுராமன் செட்டியார், ‘என் வாழ்வில் இது போன்றதொரு பேச்சை நான் இதுவரை கேட்டதே இல்லை’, என்று உணர்ச்சிவசப்பட்டு கூறினார்.
யாழ்ப்பாண புலவர்களின் பாராட்டு
அவரது கவின்மிகு கன்னிப்் பேச்சில் ஆற்றலையும், ஆழ்ந்த சிந்தனையையும் அறிந்த இலங்கை யாழ்ப்பாண புலவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். தேவரைப் பற்றி யாழ்ப்பாண புலவர் ஒருவர் எழுதிய கவிதை வரிகள் பின்வருமாறு:
”நந்து கின்ற அடியார்க்கு அருள் சுரக்கும்
நலமுடைய பூபதியாம் உலகயாள
கொத்துவென்ற கலைதனையே பலநாடு
தனிச்சென்று போதித்தோம் பரம் வித்துவென்ற
வீரதிரு விவேகானந்தம்
செய்யும் நற்பொன்முத்துயெனும் ராமலிங்க பூபதியே
முருகனருள் பெற்ற மண்ணு….
சாயல்குடி என்னும் சிற்றூரில் முதல் முழக்கமிட்ட தேவர், தொடர்ந்து எத்தனை எத்தனை மேடைகள்? சட்டமன்றம் முதல் பாராளுமன்றம் வரை தேவரின் குரல் கேட்காத இடமே இல்லை, ஒலிக்காத மேடையே இல்லை. தேவர் பேசக்கூடாது என வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டு நிறுத்தும் அளவுக்கு தேவரின் கர்ஜனை இருந்தது என்பதே காலம் நமக்கு சொல்லும் செய்தி.
– மு. வெள்ளைப்பாண்டியன்
Good article and compiled well. All the informations are excellent. First time seen the picture of Mr. Sethuraman chettiyar Best wishes.