சார் ஒரு சந்தேகம்!

மனித உரிமைகள் பற்றிய தொடர்!
அன்புடையீர்! இளைஞர்களுக்கு மனித உரிமைகள் குறித்த அறிவை ஆழப்படுத்தும் நோக்கில் இந்த கட்டுரையை எழுதுகிறேன்.

மனித உரிமைகள் :
பொதுவாக மனித உரிமைகள் என்பது நீதிமன்றங்கள், வழக்கறிஞர்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் மேம்பட்ட மக்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய வார்த்தையாக இன்றுவரையில் இருந்து வருகிறது. இதை கடைக்கோடி கிராமங்களில் இருக்கக்கூடிய, சாமானியர்கள் குறிப்பாக நமது இளைஞர்களுக்கு இது பற்றிய அறிவை ஆழப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

அதன்படி நாம் தொடர்ந்து இக்கட்டுரையின் வாயிலாக மனித உரிமைகள் என்றால் என்ன? மனித உரிமைகளின் கோட்பாடுகள் என்ன? மனித உரிமைகளின் வகைகள் எத்தனை? மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக நம் நாட்டில் உள்ள நிறுவனங்கள் எவை? நாம் நம்முடைய பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மனித உரிமை மீறலுக்கு ஆளாகும்போது அவர்களை பாதுகாப்பதற்காக, நமது இளைஞர்கள் எந்த மாதிரியான முயற்சிகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும், உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எவ்வாறு இந்திய அரசியல் சாசனப்படி தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் நாம் ஈடுபட வேண்டியுள்ளது. அந்த நோக்கத்தில் நாம் மனித உரிமைகளை பற்றி ஓரளவாவது அடிப்படையான விஷயங்களை ஒவ்வொருவரும் அறிந்து கொள்வது அவசியமாகிறது.
முதலாவதாக மனித உரிமைகள் என்றால் என்ன என்று பார்ப்போம். மனித உரிமைகள் என்பவை இன்றுவரை சட்டத்துறையில் விவாதத்திற்கு உட்பட்ட பொருளாகவேதான் இருந்து வருகிறது. இருப்பினும் அவை அடிப்படையானதும் இயல்பில் மீற முடியாததுமான பல சட்டபூர்வமான உரிமைகளுக்கு மனிதர்கள் உரித்தானவர்கள் என்ற கருத்தை தான் சுட்டிக்காட்டி நிற்கிறது. மனிதன் என்பவன் இயற்கையிலேயே அவனுக்கென கண்ணியத்தை பெற்றுள்ளான் என்று சர்வதேசச் சட்டங்களும், நம்முடைய வரலாறும், அனைத்து மதங்களும் கூறுகின்றன.

உரிமைகள் என்றால் என்ன?
உரிமை என்பது ஒவ்வொரு மனிதனும் தமக்கான நலனை அடைவதற்காக சட்டப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட அதிகாரம் என்று ஐரோப்பிய ஆய்வாளர் ஆலன் என்பவர் விளக்குகிறார். அதே போல உரிமை என்பது இயற்கையான அதிகாரங்களை பயன்படுத்துவதற்கான அனுமதி என்றும் ஒவ்வொரு மனிதனும், தான் சில சமயங்களில் இழக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் அடைவதற்கான நிவாரணம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் ஐரோப்பிய அறிஞர் சால்மன் என்பவர், ஒவ்வொரு மனிதனையும் சட்டம் அங்கீகரித்து அவருடைய நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிறார். மேலும் அதற்கு மதிப்பளிக்க வேண்டியது சட்டப்பூர்வமான கடமை என்றும், அதை மதிக்காதது சட்டப்பூர்வ தவறு என்றும் விளக்குகிறார். எனவே நாம் சுருக்கமாக உரிமை என்றால் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் ஒவ்வொரு மனிதர்களின் அடிப்படை நலன்கள் என்று கூறலாம்.

இந்தியாவில் மனித உரிமைகள்
இந்தியாவில் மனித உரிமைகளுக்கான சட்டம், 1993 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டம் இயற்றியதன் மூலம் இந்திய நாடாளுமன்றம் மனித உரிமைகள் என்பதற்கான பொருளை பின்வருமாறு விளக்குகிறது. மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993,் பிரிவு 2 (E)-ன் படி, மனித உரிமைகள் என்றால் “அரசியல் சட்டம் உத்தரவாதம் செய்துள்ள அல்லது சர்வதேச ஒப்பந்தங்களில் பொதிந்துள்ளதும் இந்தியாவின் நீதிமன்றங்களால் அமலாக்க வேண்டியதுமான வாழ்வுரிமை, சுதந்திர உரிமை, சமத்துவ உரிமை, மற்றும் தனிநபர்களுக்கான மாண்பு சம்பந்தப்பட்ட உரிமைகள் போன்றவை மனித உரிமை என்று விளக்குகிறது.
இந்தியாவில் மனித உரிமைகள் குறித்த பெரும்பாலான விஷயங்கள் நமது அரசியல் சட்டத்தின் பகுதி 3 மூலம் ஏற்கனவே பாதுகாக்கப்பட்டு இருக்கிறது என்ற போதிலும், இந்தச் சட்டம் மேலும் மனித உரிமைகள் குறித்து தெள்ளத்தெளிவாக நமக்கு உணர்த்துகிறது.

இச்சட்டத்தின்படி, மனித உரிமையானது இந்திய அரசியல் சட்டத்தினால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாக இருக்க வேண்டும் என்றும் சர்வதேச ஒப்பந்தங்களில், அதாவது மனித உரிமைக்கான சர்வதேச உடன்படிக்கைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் இவை இரண்டிற்கும் உட்பட்ட ஒவ்வொரு தனி மனிதனின், வாழ்வதற்கான உரிமை, சுதந்திரமாக இருப்பதற்கான உரிமை, சமத்துவமாக இருப்பதற்கான உரிமை மற்றும் ஒவ்வொரு நபரின் தனிநபர் மாண்பை பாதுகாப்பதற்கான உரிமை இவைகளை உள்ளடக்கியது தான் மனித உரிமை என்று குறிப்பிடுகிறது.
எவையெல்லாம் நமது உரிமைகள்? இந்த உரிமைகளை பாதுகாப்பதற்காக நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என்பதை இனி வரும் தொடர்களில் விரிவாக பார்ப்போம். நன்றி!

இரா. சொக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *