எல்லையில் இந்தியா – சீனா நாடுகளுக்கு இடையில் உடன்பாடு

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே, நீண்ட காலத்திற்குப் பிறகு எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (Line of Actual Control – LAC) பகுதிகளில் ரோந்து பணிகளை மேற்கொள்வது தொடர்பாக ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேம்படும் என்ற நம்பிக்கையும் அதிகரித்துள்ளது.

சீனாவுடன் 3,488 கிமீ நீள எல்லையை இந்தியா பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த எல்லை லடாக், இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் வழியாகச் செல்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே இதுவரை முழுமையான எல்லை நிர்ணயம் ஏதும் செய்யப்படவில்லை. ஏனெனில் இரு நாடுகளுக்கும் இடையே பல பகுதிகள் தொடர்பாக இன்றும் கருத்து வேறுபாடுகள் உள்ளன.

கடந்த 2020-இல் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வானில் நடந்த வன்முறை மோதலில், 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். பல சீன வீரர்களும் இறந்தனர். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே 1975க்குப் பிறகு முதல் முறையாக 2020இல் இத்தனை பெரிய அளவில் ஒரு வன்முறை மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் உச்சத்தை எட்டியது. அதன்பிறகும் தொடர்ச்சியாக நடந்த எல்லைப் பிரச்சினையில் இந்திய-சீன உறவுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது.

எல்.ஏ.சி., பகுதியில் ஏழு ரோந்து இடங்கள் தொடர்பாக பிரச்னை இருந்தது. பல கட்ட பேச்சுக்குப் பின், ஐந்து இடங்களில் சமரசம் ஏற்பட்டு, படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. டெப்சாங்க், டெம்சோக் ஆகிய இடங்கள் தொடர்பாக மட்டும் பிரச்னை நீடித்து வந்தது. கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு துாதரக ரீதியில் 31 சுற்று, ராணுவங்களுக்கு இடையே 21 சுற்று பேச்சு வார்த்தை நடந்தது. அதன் விளைவாக இப்போது, 2020 ஜூன் மாதத்துக்கு முன் இருந்த அளவில் இரு தரப்பும் ரோந்து செல்லலாம் என உடன்பாடு ஏற்பட்டு உள்ளது, இது இரு நாடுகளுக்கிடையில் பதட்டத்தை தவிர்க்க எடுக்கப்பட்ட துவக்கமாக இது பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் தொடர்பான விரிவான தகவல்கள் இன்னும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து சீனாவில் இருந்து எந்த அறிக்கையும் வரவில்லை என்றாலும், இந்த முயற்சி இந்திய – சீன உறவுகளை இயல்பாக்குவதற்கான ஒரு முக்கியமான படியாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இந்திய – சீன எல்லையில் ரோந்துப் பணி ஏற்பாடுகள் தொடர்பாக இரு நாடுகள் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். “இந்தியா – சீனா இடையே பேச்சுவார்த்தை நடத்த உள்ள அதிகாரிகள் கடந்த சில வாரங்களாக ஒருவருக்கொருவர் தொடர்பில் இருந்து வருகின்றனர். இதில் இந்தியாவும் சீனாவும் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதிகளில் ரோந்துப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இது 2020-ம் ஆண்டில் எழுந்த பிரச்சினைகளைத் தீர்க்கும் என விக்ரம் மிஸ்ரி கூறினார்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், கூறுகையில், “2020-ஆம் ஆண்டு, சீன எல்லையில் இந்திய வீரர்கள் எல்லையில் எதுவரை சென்றனரோ, மீண்டும் அதுவரை சென்று ரோந்துப் பணியில் ஈடுபட முடியும்,” என்று கூறினார்.

மேலும், “பதற்றத்தைக் குறைக்கும் வகையில், இந்தியா-சீனா இடையேயான பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. இரு தரப்பினரும் இன்று பரஸ்பர உடன்படிக்கைக்கு வந்துள்ளனர். இது குறித்த கூடுதல் தகவல்கள் வரும் நாட்களில் வெளிவரும்,” என்றார்.

இதற்குமுன், ஆகஸ்ட் 2023-இல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் கூட்டத்தின் போது பிரதமர் மோடி மற்றும் ஷி ஜின்பிங் இடையே கடைசி பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, இரு நாடுகளும் பரஸ்பர உறவை மேம்படுத்த விரும்புவதாகக் கூறப்பட்டது.

எல்லை ரோந்து ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது?

இந்தியா வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த ஒப்பந்தம் குறித்த விரிவான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் ஒப்பந்தத்தின் சில முக்கிய விஷயங்களை ‘தி பிரிண்ட்’ செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.

“ஒப்பந்தத்தின்படி, 2020-க்கு முன்பு எந்தெந்தப் பகுதிகளில் ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டதோ அந்தப் பகுதிகளில் ரோந்துப் பணி மேற்கொள்ளப்படும். டெப்சாங்கைத் தவிர, இதில் PP10 முதல் PP13 வரையிலான பகுதியும் அடங்கும். மேலும், மாதம் இருமுறை ரோந்துப் பணி மேற்கொள்ளப்படும். மோதல்களைத் தவிர்க்கும் வகையில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 15 ஆகக் குறைக்கப்படும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ரோந்துப் பணியைத் தொடங்குவதற்கு முன், இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தகவல்களை வழங்க ஒப்புக்கொண்டனர். இந்தக் காலகட்டத்தில், நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, ஒவ்வொரு மாதமும் கட்டளை அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்,” என்றும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

‘தி பிரிண்ட்’ செய்தியின்படி, சீன வீரர்கள் முந்தைய நிலைக்குத் திரும்புவார்கள், இந்திய வீரர்கள் ‘ஒய்’ சந்திப்பில் ரோந்து செல்வதை அவர்கள் தடுக்க மாட்டார்கள்.

“ராணுவ விலகல் முடிந்த பாங்கோங் த்சோ, கல்வான், ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ராவின் வடக்குக் கரைகள் ஆகிய பகுதிகளில் இருபுறமும் ரோந்துப் பணியை மீண்டும் தொடங்குவர்,” என்றும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

எல்லையில் ராணுவம் ரோந்து செல்வது தொடர்பாக இந்தியாவுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தை சீனா வரவேற்று உள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லன் ஜியான் கூறியதாவது: எல்லையில் ரோந்து பிரச்னை தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தீர்வு கிடைத்து உள்ளது. இதனை அமல்படுத்துவதில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம். நேர்மறையான தீர்வு காண்பதற்கு தூதரக மற்றும் ராணுவ ரீதியில் நெருங்கிய தொடர்பை கொண்டு இருந்தோம். இதனை செயல்படுத்துவதில் இந்தியாவுடன் இணைந்து செயலாற்றுவோம் என்று கூறினார்.

கடந்த காலங்களிலும் இது போன்ற பல ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றைச் சீனா மீறியதால், இந்த ஒப்பந்தத்தை சீனா நிறைவேற்றுகிறதா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

2020ல் இருந்த நிலைக்குத் திரும்பிய பிறகே சீன எல்லையை ஒட்டி நிறுத்தப்பட்டுள்ள நமது படைகள் விலக்கிக் கொள்ளப்படும் என்று இதுகுறித்து ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திரா திவேதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி, அக்.,23 அன்று சீன அதிபர் ஷீ ஜின் பிங்கை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு உறவுகள் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் மற்றும் எல்லையில் ஏற்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக இருவரும் பேச்சு நடத்தியுள்ளார்கள். எல்லையில் இரு நாட்டு ராணுவத்தினர் மோதிக்கொண்ட பிறகு, இப்போது தான் முதன் முறையாக சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து தற்போது கிழக்கு லடாக்கின் டெப்சாங் பகுதியில் உள்ள ‘ஒய்’ சந்திப்பு மற்றும் டெம்சோக்கில் உள்ள சார்டிங் நுல்லா சந்திப்பு பகுதிகளில் இருந்து இரு நாட்டு ராணுவ வீரர்களும் பின்வாங்கியுள்ளனர். மேலும், அந்த பகுதிகளில் இரு நாட்டு வீரர்கள் அமைத்திருந்த தற்காலிக கட்டுமானங்கள் அகற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *