யார் பாண்டியர்?
இந்தியத் துணைக்கண்டம் முழுமையிலும், தமிழ்நாட்டிலும் பெருந்தேசியக் கட்டமைப்பை நோக்கிய நகர்வு என்பது முன்னெப்போதையும் விட அதிகமாக இந்து ராஷ்ட்டிரம் அல்லது அகண்ட பாரதம் என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. “ஒரே நாடு ஒரே தேசம்” என்ற பேரரசுகளின் விரிவாதிக்கத்திற்கு எதிரான தமிழக வரலாறு என்பது நீண்ட நெடியது. அது மரபான இனக்குழுக்கள் மற்றும் தல மட்ட அரசுகளின் போராட்டங்களையும் தன்னகத்தே கொண்டது. இந்த வகைப்பட்ட திணைச் சமூகத்தின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வதற்கான தளத்தில் தொல்லியல் ஆய்வாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், படைப்பாளிகள் என பலரும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பண்டையத் தமிழ்ச் சமூகத்தின் வரலாறு என்பது பல்வேறு இனக்குழுக்களிடையே விரிந்து கிடக்கிறது. உலகமெங்கும் இன்று மானுடவியல் ஆய்வு என்பது விரிந்த அளவில், சமூக இனக்குழுக்களின் வரலாற்றைச் சேகரிப்பதிலும் தொகுப்பதிலும் ஈடுபட்டு வருகிறது.
தமிழகத்திலும் இது போன்ற ஆய்வுகள், படைப்புகள் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. தமிழ்ச் சமூகத்தின் வரலாறுகளை, இனக்குழுக்களின் வரலாறுகளை அதற்கான ஆதாரங்களோடு கல்வெட்டுகள், இலக்கியங்கள், செப்பேடுகள் மற்றும் நாட்டார் வழக்காற்றியல் வழியாக ஆய்வு செய்யும் முறைமை வளர்ந்து வருகிறது. இந்திய, தமிழ்ச் சமூக வரலாற்றை ஆய்வு செய்யும் போது அவை வர்க்கப் போராட்ட வரலாறாக வெளிப்படுகின்ற அதே வேளை சாதியச் சமூக வரலாறாகவும் படர்ந்து கிடக்கிறது.
பாண்டியர்கள் பற்றி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும், பாண்டியர் குல மரபு உரிமை கோரும் பல்வேறு சமூக குலங்களும் தவறான போலியான வரலாற்றுப் பெருமிதங்களைப் பேசி வரலாற்றைத் திரிக்க முயல்கின்றனர். குறிப்பாக சிலர் தாங்களே பாண்டியர் எனவும், அந்த வரலாற்றுக்குத் தாங்களே சொந்தமானவர்கள், அதன் வழி வந்தவர்கள் தாங்களே என உண்மைக்கு மாறான வரலாற்றைக் கட்டமைக்க முயல்கின்றனர். வரலாற்றை அது கடந்த வந்த வழியில் தான் தேட வேண்டும்.
இழந்த உரிமையை மீட்பதற்காகப் பாண்டிய மறவர்கள் நடத்திய பெரும் போர்கள் வரலாற்று வெளியெங்கும் பரந்து விரிந்து கிடக்கிறது. விஜயநகரப் பேரரசுக்கு எதிராக, வடுகர்களுக்கு எதிராக, பள்ளர்களும் நாடார்களும் நடத்திய போர்கள் பற்றிய கல்வெட்டுகளோ, வரலாற்றுச் சான்றுகளோ எதுவும் கிடையாது. பாண்டியர் மரபுரிமைக்கு உரிமையான பாண்டிய மறவர்கள் தான் வரலாறு நெடுகிலும் தொடர்ச்சியாகப் போராடியுள்ளனர். பாண்டியர்கள் நடத்திய முக்கியமான போர்களில் ஒன்றுதான் இளவேலங்கால் போர். அந்த வகையில் பாண்டியர்களின் வரலாற்றில் கயத்தாறு போர் மிக முக்கியமான போராகும். இளவேலங்கால்- கயத்தாறு போர் தான் பாண்டியர்கள் நடத்திய கடைசிப் பெரும் போராகும்.
கி.பி.1544 ஆம் ஆண்டில் விஜயநகர மேலாதிக்கத்தை எதிர்த்து, திருவனந்தபுரம் அரசர், திருவாடானை பாண்டியர்கள் (அஞ்சுக்கொத்து மறவர்கள்), தென்பரதவர்கள், போகலூரை சார்ந்த ஜெயதுங்க தேவர் (சேதுபதி) கலகக்கொடி உயர்த்தினர். விஜயநகர மன்னன் சதாசிவராயன் தனது உறவினனும் தளபதியுமான விட்டலராயனை (வெங்கலராஜன்) படையோடு அனுப்பினான். அப்பொழுது திருவனந்தபுரம் அரசனும், கயத்தாறில் ஆண்டுவந்த பாண்டியனும் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
வித்தலராயன் முதலில் திருவாடானை அஞ்சுகொத்து பாண்டிய மறவர்களை ஒடுக்கினான். பின்பு தூத்துக்குடி பரதவர்களை ஒடுக்கினான். பின்பு திருவனந்தபுரம் அரசன் உன்னி கேரளவர்மனை ஒடுக்கினான். பின்பு கயத்தார் பாண்டியனை ஒடுக்க தென் பகுதிக்கு வந்தான். அப்போது நடந்த போரில் வடுக படையுடன் வந்த வெங்கலராஜனான விட்டலராயனுக்கும் கயத்தாறு பாண்டியன் வெட்டும் பெருமாள் பாண்டியனுக்கும் பெரும் போர் மூண்டது. இந்தப் போரில் விஜயநகரப் படைகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. கயத்தாறு போரில் வெட்டும்பெருமாள் பாண்டியன் வெற்றி பெற்றார். அந்தப் போரிலே போரிட்டு மாண்ட பாண்டிய மறவர்களுக்கு நடுகல் எடுத்தான்.
இந்த கல்வெட்டுகள்/நடுகற்கள் இந்திய தொல்லியல் துறையால் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அந்தக் கல்வெட்டுகள் இன்றும் திருநெல்வேலி அருங்காட்சியகத்தில் உள்ளது. இதில் முக்கிய செய்தி என்னவென்றால் அந்தப் போரில் இறந்து நடுகற்கள் எழுப்பப்பட்ட அனைவருமே கொண்டையங்கோட்டை மறவர் குடியைச் சேர்ந்தவர்கள். அந்தக் கல்வெட்டு நடுகற்கள் பற்றிய குறிப்புகள் இதோ…..
1.சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்
“பூவாசி ‘மழவராய’ சிறுவனான குண்டையங்கோட்டை மறவன் வடுக படையுடன் வந்த வெங்கலராஜன் குதிரையை குத்தி பட்டான்”
2. சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்
“குண்டயங்கோட்டை மறவரில் சிவனை மறவாத தேவர் மகன் பெருமாக்குட்டி பிச்சன் காலாட்போரில் பட்டான்”
3. சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்
“குண்டையங்கோட்டை அஞ்சாதகண்ட பேரரையரும் போரில் பட்டான்”
4. சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்
“குண்டயங்கோட்டை மறவரில் சீவலவன் வென்றுமுடிகொண்டான் விசயாலயத்தேவன் மகனான விசயாலயத்தேவன் போரில் பட்டான் “
{4. (அ). அதே நடுகல்லில் குண்டயன்கோட்டை மறவரில் “லிங்கத்தேவ வன்னியனை” என்றும்.
4.(ஆ) விசையாலயத்தேவ திண்ணியனை என்றும் மூன்று தலைமுறை பெயர்கள் இதில் உள்ளன.}
5. சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்
“குண்டயங்கோட்டை மறவரில் அரசுநிலை நின்ற பாண்டிய தேவரின் புத்திரனான செல்லபெருமாள்
இராமகுட்டி குதிரையை குத்திப் போரில் பட்டான்” {எதிரியின் குதிரையை குத்திவிட்டு சென்றபோது ராமக்குட்டி எதிரிகளால் கொல்லப்பட்டான்.}
6.சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்.
பைந்தலைதொண்டைமான்மிக்குப்பிள்ளையின் மகன் “ராகவேங்கை” குதிரைபடையுடன் பட்டான்” {தொண்டைமான் என்னும் பெயர் அறந்தாங்கி-புதுக்கோட்டை கள்ளர்கள் மற்றும் மறவர்கள் பெயர். தஞ்சை கள்ளரில் தொண்டமார் எனும் பட்டம் உள்ளது. }
7.சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்
“குண்டயங்கோட்டை மறவரில் பாகந்தலைபிரியாதான் தொண்டைமான் மகனான பிழைபொருத்தான்”
8. சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்
“குண்டயங்கோட்டை மறவரில் அஞ்சாதான் இராமவெட்டிபோரில் பட்டான்”
9.சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள். “பெயர் அழிக்கப்பட்டுளளது”
10. சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்.
“குண்டயங்கோட்டை மறவரில் இளவேலங்கால் ஆண்டார் மகன் ஆள்புலித்திருவன் போரில் பட்டான்”
இப்படியாக அந்த நடு கற்களிலே போரிலே மாண்ட மறவர்கள் பற்றிய கல்வெட்டுகள் உள்ளன. வடுகர்களை எதிர்த்து பாண்டிய மறவர்கள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டங்கள் வரலாற்று வெளியில் பெரிதும் கவனப்படுத்தப்படவில்லை.
இந்தப் போராட்ட வரலாறுகள் ஒரு குலத்தின் பெருமையை பேசுவதற்கோ அல்லது ஆண்ட பரம்பரை பெருமிதங்கள் கொள்வதற்கோ அல்ல. மாறாக தமிழர் Vs வடுகர் என இனவாதம் பேசி, சமகால அரசியலில் உழைக்கும் மக்களைக் கூறுபடுத்தி, அவர்களுக்கு எதிராக முஷ்டி உயர்த்தும் சாதியவாதிகளையும், போலித் தமிழ்த் தேசியவாதிகளையும் அம்பலப்படுத்துவதற்காகத் தான் இந்த தொடர் பதிவுகள். தவிரவும் ஆண்ட பரம்பரை என்று வரலாற்றில் எதுவுமே கிடையாது. ஆண்ட மன்னர்கள் ஒரு குலத்திலிருந்து, சாதியில் இருந்து பிறந்திருக்கலாம். இந்திய /தமிழ்ச் சமூகத்தில் சாதிய சமூக அமைப்பினால் இது தவிர்க்க முடியாது. அதற்காக அந்த சாதி முழுவதுமே ஆண்ட பரம்பரை என்று பேசுவது வரலாற்று அறிவுத் துளியும் இல்லாதவர்களின் உளறல் ஆகும். இதையும் கருத்தில் கொண்டு தான் பாண்டிய மறவர்களின் போராட்ட வரலாற்றைத் தொடர்ந்து பதிவிடுகிறேன்.
யார் பாண்டியர் என்ற தேடல் விரியும்…..
குறிப்புதவி:
திருநெல்வேலி அரசு அருங்காட்சியக கையேடு
Annual reports on South Indian Epigraphy by ASI
Bibliotheca Instituti Historici S.I volume 20 by Georg Schrhammer
Madras disrrict Gazetteers Tinnevelly volume 1
Francis Xavier; His life, His Times volume 3.
காலம் தோறும் கயத்தாறு – செ.மா.கணபதி
இணையத் தள பதிவுகள்.
– மருதுபாண்டியன் இரா.