முக்குலத்தோரை சீண்டும் சீமானின் சில்லறைத்தனம்
தமிழகத்தில் செல்லாக்காசாகும் நாம் தமிழர் கட்சி
தமிழர் தேசியம் என்று பேசக்கூடிய போலி சாதீயவாதிகள் பலரும் வரலாற்றைத் திரித்து, தமிழகத்தில் உழைக்கும் விளிம்பு நிலை மக்களுக்கு எதிராக சாதீய அரசியலை கையிலெடுத்து அநீதிகளுக்கு எதிராக போராட வேண்டிய அம்மக்களை சாதிச் சண்டைகளுக்கு கொம்பு சீவி விடுகின்றனர். இல்லாததையும் பொல்லாததையும் பேசி, சாதீய வெறிகளை ஊக்குவித்து, ஒரு சமூகத்தை உயர்த்தியும், பிறரை தாழ்த்தியும் பரப்புரை செய்வதன் மூலம் தமிழ்ச் சமூகங்களுகிடையே குழப்பங்களையும், பகைமை உணர்ச்சிகளையும் ஏற்படுத்தி வருகின்றனர். தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும், வரலாற்றை, தனது வசதிக்காக திரித்து மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்த முனைகின்றார். அதிலும் சீமான் அவர்கள், குறிப்பாக தேவரினம் மீது வரலாற்றுக்கு புறம்பான பொய்யான செய்திகளைத் திரித்து பரப்புவதன் மூலம் அம்மக்களுக்கு எதிராக பிற சமூக மக்களை ஓரணியில் திரட்ட முனைப்பாக செயல்படுகிறார்.
மறவர் குடியான பாண்டிய மன்னர்கள், பாளையக்காரர்களாக மாற்றம் பெற்றும் தொடர்ந்து 18 வருடங்கள் ஆங்கிலேயர்களோடு போரிட்டு தங்கள் மண்ணை காக்க மறப்போர் செய்தார்கள் என்று உண்மை இவ்வாறிருக்க, சீமானோ வன்மத்துடன் மறவர்கள் போரிடாமல் ஓடிவிட்டதாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மகிழ்ச்சி படுத்துவதற்காக கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகிறார். இன்னும் சொல்லப்போனால், தேவரினத்தை ஏனைய பிற சமூகங்கள் அனைவரின் எதிரியாக கட்டமைக்க பெரும் முயற்சி எடுக்கிறார்.
மறவர்கள்தான் பாண்டியர்கள் என ஆயிரமாயிரம் ஆவணங்கள் கொட்டிக் கிடக்கும்போது, சீமான் முக்குலத்தோரை இழிவுபடுத்தும் விதமாக, ஒவ்வொரு மேடையிலும், சேர, சோழ, பாண்டியர்கள் எல்லாம் சேர்வார், மறவர், கள்ளர் என பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான் இவர்களுடைய வரலாற்று அறிவு என்று இந்த பேரினத்தை எள்ளி நகையாடுகிறார்.
இதுபற்றி, தமிழ்நாடு நேதாஜி இளைஞர் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் பசும்பொன் செ.முத்து அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, தமிழ்ச் சமூகங்களை சாதி ரீதியாக பிளவுபடுத்தி ஒருவருக்கொருவரை நேரெதிராக நிறுத்தும் சீமானின் இந்த நரித்தனமான கீழ்த்தர அரசியலை கண்டித்து தமிழ்நாடு நேதாஜி இளைஞர் சங்கம் சார்பில் கடும் கண்டனங்களை பதிவு செய்கிறோம். தொடர்ந்து தேவரினத்திற்கு எதிராக செயல்படும் சீமானிடமிருந்து, தேவரின இளைஞர்கள் விலகி இருக்க வேண்டும். அவரின் சாதீய அரசியலில் இளைஞர்கள் சிக்கி சின்னாபின்னமாகி விடக்கூடாது என்று எச்சரிக்கை செய்கிறார்.
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகம், கடந்த செப்.26 அன்று சீமானுக்கு எதிராக பெரும் திரளாக மக்களை திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறது. ஆர்ப்பாட்டத்தில் அதன் நிறுவன தலைவர் பவானி ஆ.வேல்முருகன், சீமானை கடுமையாக சாடியதோடு அவருக்கு தனது கடும் எச்சரிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். சீமான் தொடர்ந்து முக்குலத்தோர் சமுதாயம் மீது வன்மத்துடன் பேசி வருவதாகவும், தென் தமிழகத்தில் தேவர் மற்றும் தேவேந்திரகுல வேளாளர் இன மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் வேளையில் அவர் சம்பந்தமே இல்லாமல், உள்நோக்கத்துடன் ‘யார் பாண்டியர்?’ எனும் கேள்வியை மேடைதோறும் எழுப்பி, தேவரினத்தை இழிவுபடுத்துவதன் மூலம், இரு சமூகத்திற்கும் இடையில் மிகப்பெரிய அளவில் சாதீயச் சண்டைகளை உருவாக்கி விடுகிறார் என்றும் குற்றம் சாட்டுகிறார். மேலும், தமிழகத்தில் இரத்த ஆறு ஓடவேண்டும் என்று திட்டமிட்டு செயல்படும் சீமானை தமிழக அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் காவல்துறைக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
சீமானின் தேவரின மக்களுக்கு எதிரான இந்த தொடர் விரோத செயல்களுக்கு விளக்கம் கேட்க பி.எம்.டி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் இசக்கிராஜா தேவர், சீமானை அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது, அவரிடம், ‘நான் பசும்பொன் வருகிறேன், என்னை தடுத்துப்பார்’ எனவும், ‘பாண்டியர்களை பார்த்துவிடுவோம்’, ‘சந்தித்துவிடுவோம்’ என்றும் ஒரு மூன்றாம் தர அரசியல்வாதி போல தெருச்சண்டையிட்டுள்ளார். இது தற்போது மேற்கொண்டு எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய நிகழ்வாக, தேவரின மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து எங்களுக்கு எதிராக செயல்படும் சீமான், வருகின்ற தேவர் குருபூஜைக்கு வரக்கூடாது என கோரிக்கை எழ, சீமானோ, ‘பசும்பொன் என்ன உங்களுக்கு பட்டா போட்டா கொடுத்திருகிறார்கள்’ என்று கேட்டு அநாகரீகத்தின் உச்சத்திற்கு சென்றிருக்கிறார்.
சீமானின் இந்த திடீர் சாதீய அரசியல், தமிழ் உணர்வாளர்கள் மத்தியிலும், தமிழக மக்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியையும், அருவருப்பையும் உண்டாக்கியிருக்கிறது. தேவரின மக்களும், இயக்கங்களும், எங்களை இழிவுபடுத்தும் சீமான், பசும்பொன் வரக்கூடாது என்று போர்க்கொடி தூக்க ஆரம்பித்துள்ளார்கள். சீமானின் போலி தமிழ் தேசியம் மெல்ல மெல்ல அதன் முகத்திரை கிழிந்து, அவரின் உண்மையான சாதிவெறி அரசியல் வெளிப்படுவதை அதன் இயக்கத் தோழர்களே பெரும்பாலோனர் உணரத் தொடங்கியதன் விளைவு, நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் பெருமளவில் அதன் தொண்டர்கள் வெளியேறி வருகின்றனர். குறிப்பாக தேவரின இளைஞர்கள், கடும் கோபத்தில் கட்சியை விட்டு வெளியேறி, சீமானோடு செயல்படும் தேவரினத்தைச் சார்ந்த சாட்டை துரைமுருகனையும் சாடுகின்றனர்.
சீமானின் சில்லறைத்தனமான அரசியலுக்கு தேவரின மக்களே கூடிய விரைவில் முடிவுரை எழுதிவிடுவார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் கூற அரம்பித்துள்ளது அவரின் அரசியலுக்கு அந்திம நேரம் வந்துவிட்டதையே நமக்கும் காட்டுகிறது.
– அருண்மொழித்தேவன்