வான்புகழ் கொண்ட வாளுக்குவேலி அம்பலத் தேவரின் 223-வது அம்பலம் விழா
தென்பாண்டிச் சிங்கம், மாவீரன், பாகனேரி நாட்டுத் தலைவர், வாளுக்கு வேலி அம்பலம் இந்திய நாட்டின் சுதந்திர போராட்டத்தில் தவிர்க்கமுடியாத ஆளுமையாவார். வாளுக்குவேலி அம்பலக்காரர் அவர்களின் 223-வது அம்பலம் விழா வருகின்ற அக்டோபர் 24 அன்று சிவகங்கை மாவட்டம் கத்தப்பட்டு கிராமத்தில், வருடா வருடம் சிறப்பாக நடத்தப்பட்டு அவரது தியாகத்தை போற்றுவது இன்றும் மரபாக உள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சொக்கநாதபுரம்-மதகுபட்டி பிரதான சாலையில், வலது புறம் பிரியும் ஒரு சிறிய பாதையொன்றில் சிறிது தூரம் சென்றால் அங்கே அமைந்துள்ள தொட்டியத்துக் கருப்பையா கோவிலில் நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை, உதடுகளுக்கு மேலே உரை விட்டெழுந்த வாள் இரண்டைப் பதித்தது போல மீசை, கம்பீரத்தையும் கருணையின் சாயலையும் காட்டும் விழிகள், நீண்டுயர்ந்து வளைந்த மகுடத் தலைப்பாகை, நெடிய காதுகளில் தங்க வளையங்கள், விரிந்த மார்பகத்தில் விலை உயர்ந்த பதக்க மணிச்சரங்கள், இரும்புத்தூண் அனைய கால்களிலும் எஃகுக் குண்டனைய புஜங்களிலும் காப்புகள், கையிலே ஈட்டி, என கம்பீரத்தின் முழு வடிவமாக அங்கு காட்சியளிக்கிறார் கள்ளர் குல மாவீரன் வாளுக்கு வேலி அம்பலக்காரர்.
வாளுக்கு வேலி என்பது- ‘ஒரு உயிரை , உடமையை, மக்களை, காத்து நிற்பது வாள் என்றால், அந்த வாளுக்கே வேலிபோல காப்பவன்’ என்று பொருள்படும். அந்த வகையில் மக்களை காப்பதில் அரணாக நின்று காத்தவர் பாகனேரி நாட்டை ஆண்ட வாளுக்குவேலி அம்பலத்தேவர்.
பாகனேரி நாடு, சிவகங்கை மாவட்டத்தில்், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. “பாகனேரி நாடு” தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் காளையார் கோவில், கல்லல், திருப்பத்தூர், சிவகங்கை ஊராட்சி ஒன்றியங்களின் பகுதிகளை உள்ளடக்கிய சுமார் 750 சதுர கிலோமீட்டர் பரப்பில் 22 1/2 சிற்றூர்களைக் கொண்ட ஒரு பரந்து விரிந்து பகுதியாகும். அதாவது கிழக்கில் அரண்மனை சிறுவயல், காளையார் கோவில், தெற்கில் மறவமங்கலம், ராஜசிம்ம மங்கலம், மேற்கில் சிவகங்கை, சோழபுரம், வடமேற்கில் திருக்கோட்டியூர், வடக்கில் பட்டமங்கலம் வரை பரவிக் காணப்படுகிறது. 13ம் நூற்றாண்டில் பாகனேரி, போகனேரிப் பற்று எனவும், கத்தப்பட்டு, கற்றைப்பட்டு எனவும் அழைக்கப்பட்டது.
இந்த பாகனேரி நாட்டின் தலைவன்தான் (குறுநில மன்னர்்) வான்புகழ் போற்றும் தென்பாண்டிச் சிங்கம், மாவீரன் வாளுக்குவேலி அம்பலம் தேவர். இவருடைய தம்பி கருத்த ஆதப்பன் அம்பலம் மற்றும் தங்கை கல்யாணி நாச்சியார் ஆவார்கள்.
கிபி 1780 ல் ஹைதர் அலியின் படை உதவியை பெற்ற வேலுநாச்சியார் மருதுசகோதரர்களுடன் சேர்ந்து சிவகங்கை சீமையை மீட்க புறப்பட்டபோது அவருக்கு ஆதரவாக களம் கண்ட கள்ளர் தலைவர்களில் மிக முக்கியமானவர் வாளுக்கு வேலி அம்பலம். சிவகங்கை சீமைக்கு ஆதரவாக வெள்ளையர் இராணுவத்தோடு பெரும் சண்டையிட்டனர் பாகனேரி அம்பலகாரர்கள்.
மருதிருவருக்கும் ஆங்கிலேயருக்கும் நடந்த சண்டையில் அம்பலகாரர் துணை மருதிருவருக்கு பெரியதோர் பலம் என்பதை அறிந்த ஆங்கிலேயர்கள் வாளுக்குவேலி அம்பலத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வந்தார்கள்்.
ஆங்கிலத் தளபதியான கர்னல் அக்னியூ ஒருபுறத்திலே அமர்ந்திருக்கிறான்…
மறுபுறத்திலே அகன்ற மார்பு சிவக்க கம்பீரமாய் முறுக்கிய மீசையோடு கால்மேல் கால்போட்டு அமர்ந்திருக்கிறார் பாகனேரி நாட்டுத்தலைவர் வாளுக்கு வேலி அம்பலக்காரர்…
மருது சகோதர்களுக்கும் தங்களுக்க்கிடையே நடக்கும் யுத்தத்தில் எந்தவிதத்திலும் அம்பலம் மருது சகோதரர்களுக்கு உதவக்கூடாது என்று கர்னல் அக்னியூ கொந்தளித்துக் கொண்டிருக்கிறான்.
லேசாக கையை உயர்த்திய அம்பலம், “சொந்த மண்ணையும் தலைவர்களையும், அன்னியர்களுக்கு விற்பனை செய்ய நாங்கள் ஒன்றும் வியாபாரிகளல்ல, வீரர்கள்; பிழைத்து போ…” என விரட்டியடித்தார்்.
கிபி 1801 ல் வெள்ளையருக்கு எதிரான போரின் முடிவில் மருதுபாண்டியர்களை ஆங்கிலேயர்கள் கைது செய்தனர். இதைக் கேள்விப்பட்ட வாளுக்குவேலி அம்பலம் வெகுண்டெழுந்தார். தன் தளபதிகளை அழைத்து ’ஊமைத்துரையை கைது செய்து விட்டார்கள் வெள்ளையர்கள், சின்ன மருதுவையும் பெரிய மருதுவையும் தூக்கிலிடத் திட்டமிட்டிருப்பதாக நமக்கு தகவல்கள் வருகின்றன. மருது சகோதரர்கள் நமது சொத்து, அவர்களை இழக்கக்கூடாது. மருது மன்னர்களைக் காக்க வழிநெடுகிலும் உள்ளவர்கள் திரளுங்கள். சாதியால் யாரும் தனித்து நிற்க வேண்டியதில்லை. தமிழராய் கிளம்புங்கள். காக்கவேண்டியது மருது மாமன்னர்களை என்பதை மனதில் வைத்து கிளம்புங்கள். பாகனேரி பட்டமங்கல நாட்டு படைகள் தயாராகட்டும். திருப்பத்தூர் கோட்டையை தாக்கி மருது சகோதரர்களை விடுவிப்போம், பிறகு காளையார்கோவிலை மீட்போம் என்றார். தளபதிகள் யுத்தத்துக்கு தயாராகினார்கள்.
படைகள் பாகனேரியில் அணிவகுத்து நின்றன. முதல் வரிசையில் வாளுக்கு வேலி அம்பலம் குதிரையிலேறி கம்பீரமாக வர, அவருக்குப் பின்னால் யானை, குதிரை என படைகள் அணிவகுத்துச் சென்றன. உள்நாட்டில் வெள்ளையர்களோடு கைகோர்த்து சதிசெய்த சிலர், மருது சகோதரர்களை மீட்க வாளுக்கு வேலி அம்பலம். படை திரட்டி வரும் செய்தியை வெள்ளையர் கவனத்துக்கு கொண்டு சென்றனர். வாளுக்கு வேலி அம்பலத்தை வரும் வழியிலேயே அழித்தொழிக்க அனைவரும் சேர்ந்து சதித்திட்டம் தீட்டினர்.
அதற்கென ஒரு இடம், மரங்கள் அடர்ந்த ’கத்தப்பட்டு’ என்ற இடத்தில் தேர்வு செய்யப்பட்டது. அங்கே சதிகாரர்கள் பிரம்மாண்டமான ஒரு பெரும் புதைகுழி ஒன்றைத் தோண்டினார்கள். மேலே இலை, தழைகளைப் பரப்பி அதன் மீது மண்பத்தைகளும் போட்டு குழி வெளியில் தெரியாவண்ணம் மூடி வைத்திருந்தார்கள்.
மருது சகோதரர்களுக்கு உதவி செய்ய பாகனேரி, பட்டமங்கலப் படைகள் வாளுக்குவேலித்தேவனின் தலைமையில் திருப்பத்தூர் கோட்டை நோக்கி புறப்பட்டபோது, படைகளுக்கு தலைமையேற்று மின்னல் வேகத்தில் புயலென புரவியில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த வாளுக்கு வேலி அம்பலம், வழியில் அக்குழியிருப்பது தெரியாமலேயே படைகளுக்கு முன்பு ஐம்பது அடி தொலைவில் வெட்டப்பட்டிருந்த அந்த பயங்கர படுகுழியில் கண்ணிமைக்கும் நேரத்தில் குதிரையோடு விழுந்தார். அவர் விழுந்த வேகத்தில் குழியை மண் மலைபோல மூடிக்கொண்டது. அத்தனை படைவீரர்களும் ஒரு கணம் திகைத்து நின்று, பின் விரைவாக அந்தக் குழியை தோண்டி மண்ணை அகற்றி வாளுக்கு வேலியை மீட்டனர். ஆனால் அதற்குள் மண், அந்த மாவீரனது உயிரைத் தின்று முடித்துவிட்டது. அந்த தென்பாண்டி சிங்கத்தின் உடல் கத்தப்பட்டுப் படுகுழியில் இருந்து அக்டோபர் 24, 1801 அன்று உயிரற்ற நிலையிலேயே வெளியே வந்தது.
கத்தப்பட்டு எனும் ஊரில் அவர் உயிர் பிரிந்த அந்த இடத்தில் அவரின் நினைவாக, அவரது சகோதரர் கருத்தப்பன் அம்பலத்தால், நடுகல் நட்டும் தற்போது மக்கள் சிலையும் வைத்து வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. வாளுக்கு வேலி அம்பலத்தை மக்கள் பலர் குலதெய்வமாகவும் கூட இன்றளவும் வழிபட்டு வருகிறார்கள்.
ஒவ்வொரு வருடமும் வாளுக்குவேலி அம்பலம் அவதரித்த ஜுன் 10 -ஆம் தேதியில், நடுகல் வழிபாடு விழா, அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தன்னை பணிந்து நிற்கும் மக்களுக்கு அன்பு, கருணை, கனிவு, வீரம், உற்சாகம் என அனைத்து வளங்களையும் தந்து காக்கும் கடவுளாக அருள்புரியும் கள்ளர் குல எரிமலை தியாகி வாள்கோட்டை நாட்டின் மன்னரின் நினைவை போற்றுவோம்.
விசுவாசமும், வீரமும், நெஞ்சுரமும் ஒருங்கே பெற்ற சிவகங்கை சீமையின் பாகனேரி நாட்டு வாளுக்குவேலி அம்பலத் தேவருக்கு வரும் அக்டோபர் 24 அன்று நடைபெறும் 223வது நினைவு நாளில் வீரவணக்கம் செலுத்துவோம்.
வாழ்க வான்புகழ் கொண்ட வாளுக்கு வேலியார்!