யார் பாண்டியர்- தொடர் 2
பிற்காலப் பாண்டியர் வரலாற்றில் மறக்கமுடியாத பெயர் ஒன்று உண்டென்றால், அது மேற்கண்ட “சுந்தரபாண்டியன்” என்ற பெயரே ஆகும்.
சுந்தரபாண்டியன் என்ற இப் புகழ் பெற்ற பெயரில் மூன்று பாண்டிய மன்னர்கள் மிகவும் வலிமை பெற்று விளங்கியுள்ளனர், அவர்களில்,
இரண்டாம் பாண்டிய பேரரசை தொடங்கி வைத்தவனும், மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் ஆதிக்கத்திலிருந்து பாண்டிய நாட்டை மீட்டவனும், “மதுரைமீட்டசுந்தரபாண்டியன்” -எனும் புகழ் மொழிக்குரியவனும், “சோணாடு கொண்ட தேவர்” என சோழ நாட்டை வென்று, மீண்டும் தனது பொன்னமராவதி அரண்மனையில் வந்திறைஞ்சிய சோழனுக்கே அந்த நாட்டை ‘கொடையாக’ வழங்கியதன் மூலம் “சோணாடு வழங்கியருளிய தேவர்” என பாண்டியர் புகழை பாரில் நிறுவியவனுமான,
1) முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் {கி.பி.1216-1238},-
போசளன் வீரசோமேஸ்வரனை “மாமடி”என்றும், கொங்குச் சோழராஜன் விக்கிரமச்சோழனை “மச்சுனன்” எனவும் உறவு கொண்டாடி மகிழ்ந்த,..
2)இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் {கி.பி.1238-1255},
இரண்டாம்பாண்டியப்பேரரசைஉச்சத்தில் நிறுத்தியவனும், சேரனை வென்று ,
சோழரை முற்றிலும் அழித்துத் தனது அரியணையின் கீழ் வைத்து, வடக்கில் நெல்லூர் -கடப்பா வரை “எம்மண்டலமும் கொண்டருளிய சுந்தரபாண்டியத் தேவர்”-எனுங் கீர்த்தியைப் பெற்றவனும், அரசியல் சூழலுக்குத் தக்கபடி சோழருடனும் -பாண்டியருடனும் தமது குள்ளநரித்தனத்தால் சகுனித்தனம் புரிந்து, இருவருக்கும் இடையில் “பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்” என்ற சந்தர்பவாத அரசியல் செய்து கொண்டிருந்த போசளன் வீரசோமேஸ்வரனை கொன்று போசளருக்கு முடிவு கட்டியவனுமான,
3)முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் {கி.பி.1251-1284},
– என இச் ‘சுந்தரபாண்டியன்கள்’ பாண்டிய வரலாற்றில் தங்களது முத்திரையைப் பதித்து இருந்தனர்.
மேற்கண்ட இம் மூவரைத் தவிர இன்னும் பல சுந்தரபாண்டியன்களும் உண்டு, முற்காலப் பாண்டியனான ‘சோழன் தலைகொண்ட கோ வீர பாண்டியன்’ {946-931} உடன்பிறந்த தமையன்
(4)’சுந்தரபாண்டியன்’ என பெயர் கொண்டிருந்தான்.
அடுத்ததாக,…
(5)’மாணாபரணன் சுந்தரபாண்டியன்’ {1104-1131},
(6) இரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் {1277-1294},
(7)மூன்றாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் {1303-1322}, இவனின் சமகாலத்தவனான,…
(8)அவனி வேந்த ராமன் எனும் பெயர் பெற்றிருந்த நான்காம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் {1303-1326},
(9) கலியுகராமன் எனவும், கோதண்டராமன் எனவும், குறிக்கப்பெற்ற ஐந்தாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்{1304-1319},
(10) சடையவர்மன் ராஜராஜன் சுந்தரபாண்டியன் {1310-1332}
{இவன் காலத்தில்தான்
அலாவுதீன் கில்ஜியின் ஆணைப்படி மாலிக்காபூர் படையெடுப்பு நடந்தது}.
(11) ஆறாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் {1316-1336}
(12) ஏழாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் {1329-1347}
(13) ‘பொன் பரப்பின பெருமாளான’ எட்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் {1330-1347}
(14) ஒன்பதாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் {1340-1364} – இவ்விதம், பாண்டிய மன்னர்களின் பெயர் வரிசைகளில் “சுந்தரபாண்டியன்” எனும் பெயர் மிகவும் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக விளங்கியிருப்பதைக் காணலாம்.
சரி … பாண்டியர்கள்தான் இப்பெயருக்கு முக்கிய இடமளித்துள்ளனர் என்று எண்ணிவிட்டு கடந்து செல்ல முடியாதவாறு, பாண்டிய நாட்டை “சோழபாண்டியன்” என்ற பெயரெய்தி ஆண்டிருந்த சோழவழியிலும் ஒரு, சடையவர்மன்”சுந்தரசோழபாண்டியன்” {1021-1051} வருகிறான்.
இவ்வாறு முற்காலப் பாண்டியரிலிருந்து மதுரையின் கடைசிக்கட்ட பாண்டியர் வரை, பதினான்கு “சுந்தரபாண்டியன்களும்”- சோழ பாண்டியரில்ஒருவனுமாக.. மொத்தம் பதினைந்து பேர், பாண்டிய வரலாற்றை ஆக்கிரமித்துள்ளதை காணலாம்.
சுந்தரபாண்டியன்- கிளை-கரை- சாசனங்கள்; ஓர் ஒப்பீடு
மறவரின் 50 கிளைகளில் “சுந்தரபாண்டியன்” கிளையும் ஒன்று! – இக்கிளையார் மேலுள்ள சுந்தரபாண்டியன்களில் இருந்து வழிவந்தவர்கள் என கருதலாம். ஏற்கனவே “அழகியபாண்டியன்” என கொண்டையன் கோட்டை பிரிவினரின் கிளைகளில் ஒன்று உள்ளது. சுந்தரம் என்பதற்கு அழகு என்பதும் மற்றொரு பொருளாகும் என்றாலும், இந்த சுந்தரபாண்டியன் கிளை, கொண்டையன் கோட்டை மறவருடையதாக இல்லாமல், தனியான மறவரின் ஐம்பது கிளைகளில் ஒன்றாக பாவாணர் குறிப்பிட்டுள்ளார். இது ஒரே சுந்தரபாண்டிய மன்னர் வழியாக இல்லாமல், மேற்கண்ட அனைத்து சுந்தரபாண்டியர்களின் வழியினராக ஒருங்கிணைந்து ஒரே குழாமாக மாறியவர்கள் என்பதாக இருக்கலாம், என்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது. மேலும் இக்கிளைக்கு “கொத்தும்” பாவாணர் தரவில்லை! ஆக இதில் சோழபாண்டியரும் அடக்கம் என்பது திண்ணம்.
சாசனங்களில் சுந்தரபாண்டியன் பெயரைச் சுமந்தும் மறவர்கள் வருகிறார்கள், அதுவும் சுந்தரபாண்டியன்கள் காலமான 13ம் நூற்றாண்டிலேயே இவைகளும் வெட்டப்பட்டுள்ளன.
மேலும் மறவர் கிளைகளில் ஒன்றாக சுந்தரபாண்டியன் இல்லாமல், அதை மறவரின் பெயராகவும் கல்வெட்டுகள் படம்பிடித்து காட்டுகின்றன,…
1) குளத்தூர் வட்டம் புல்வயல் ஊரில் உள்ள அக்கல்வெட்டு….
“ புல்வயல் மறவரில் காடவராயன் மகன் ‘சுந்தரபாண்டியனுக்கு’ ஆசிரியம்” – என்கிறது ,
மற்றொன்று, …
“பனையூர் மறவரில் எட்டி பொன்னனான சுந்தரபாண்டியப்பேரரையன்” -என்கிறது.
இன்று சாதாரணமாக தோன்றும் புல்வயல் ஊரானது முன்பு குறுநில அரசாகும். இந்த அரசின் தோற்றம் 13ம் நூற்றாண்டாகும் {379}. சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தின் பரம்பூர்க் கல்வெட்டு {479}, புல்வயல் அரசு தேர்பொலிய நின்றாரான கடம்பராயரின் செயல்பாடுகளைக் கூறுகிறது. அந்த வம்சத்தில் வந்தவனே மேலுள்ள கல்வெட்டு குறிப்பிடும் சுந்தரபாண்டியன் பெயர் பெற்றிருக்கும் மறவனாவான்.
அதேபோன்றுதான் பனையூர் -குளமங்கலம் போன்ற பகுதிகளும் அதிகாரமிக்க மறவரையர்களின் கைகளில் இருந்தவையாகும். இங்கே மேற்கண்ட காலகட்டத்தில் அதிகாரத்தை செலுத்தியவனாக சுந்தரபாண்டியப்பேரரையன் இருந்துள்ளான். மேலும் காங்கேயன் -நிஷதராஜன்-கடம்பராயன் -விஜயாலயத்தேவன் முதலான அரசரையர்கள், மன்னர்களைப் போன்றே ஆணைகளை வெளியிட்டு நிலக்கொடைகளை வழங்கியுள்ளனர்.
தவிர, … புதுக்கோட்டை வட்டார, செவலூரில், ‘அழகாண்டான்’ கரை மறவர்கள் வசிக்கின்றனர். நெல்லையில் மறவருக்கு கிளைப்பிரிவு போல, புதுகையில் கரைப்பிரிவு செயல்படுகிறது. இந்த அழகாண்டான் கரை என்பதை அழகியபாண்டியன் கரை என்றுதான் வழங்கியுள்ளனர். இதே திரிபு, நெல்லையில் ஒரு ஊரின் பெயருக்கு வழங்குகிறது. அழகியபாண்டியபுரம் எனும் அவ்வூர், வழக்கு மொழியில் அழகாண்டாபுரம் என மருவியதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். அழகியபாண்டியன் கிளை என்பது மறவர் கிளைகளில் ஒன்று என ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறோம்். அழகாண்டான் கரையார்கள் குலதெய்வமாக “ராஜாக்கள் – மூதாக்கள்” தெய்வங்கள் உள்ளன.
துணை புரிந்த நூல்கள்.
– – – – – – – – – – – – – – – – – – – – – –
1)இற்றைத் தமிழர் குலங்கள் – {மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்}
2) மாமதுரை
{ பொ.ராசேந்திரன் – சொ.சாந்தலிங்கம்}
3) புதுக்கோட்டை வரலாறு 1600 வரை, {முனைவர். வீ.மாணிக்கம்}
4) ஆவணம் நூல். { தொல்லியல் கழகம்}
நன்றி
திரு. கி.ச.முனிராஜ் வாணாதிராயன் அவர்களின் முகநூல் பதிவில் இருந்து…