ஜீரோ எஃப்.ஐ,ஆர் என்றால் என்ன?

பாதிக்கப்பட்டவர் புகார் அளிக்க காவல் நிலையம் செல்லும் போது சந்திக்கும் சவால்களில் ஒன்று “சம்பவம் நடந்த இடம் எங்கள் அதிகார எல்லைக்குள் வராது, நீங்கள் அந்த பகுதிக்குட்பட்ட காவல் நிலையம் செல்லுங்கள்” என காவலர்கள் நமக்கு அறிவுறுத்த வாய்ப்புள்ளது. இதனால் ஏற்படும் தாமதங்களை நாம் பதட்டமின்றி சமாளிப்பதற்கான தீர்வு தான் (Zero FIR) ஜீரோ எஃப்ஐஆர்!

இது அதிகார எல்லையை கடந்து ஒரு மாநிலத்திற்குள் எங்கு நடந்த குற்றமானாலும் எந்தவொரு காவல் நிலையத்திலும் புகாரை சட்டப்படி பதிவு செய்யும் வாய்ப்பையும் உரிமையையும் பொது மக்களுக்கு தருகிறது. காவல் நிலையத்தில் புகார் கொடுப்பது எவ்வாறு? மற்றும் புகாரை ஏற்றுக்கொள்ள மறுத்தால் என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றிய அடிப்படை அறிவு ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டும்.

எஃப்ஐஆர் (FIR) என்றால் என்ன?
பிடியாணையின்றி கைது செய்யக்கூடிய குற்றங்கள் (Cognizable Offences) பற்றிய தகவல் கிடைத்தவுடன் காவல்துறை அதிகாரிகள் குற்றம் பற்றி பாரதிய நாகரிக் சுரக்‌ஷா 2023, பிரிவு 173-ன் கீழ் பதிவு செய்யும் சட்டப்பூர்வமான ஆவணம் தான் எஃப்ஐஆர் அல்லது முதல் தகவல் அறிக்கை எனப்படும்.

ஜீரோ எஃப்ஐஆர் (Zero FIR) என்றால் என்ன?
ஒரு புகாரைக் குறிப்பிட்ட காவல் நிலைய எல்லையில்தான் அளிக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. பாதிக்கப்பட்டவர் சம்பவம் நடந்த இடத்தின் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்திலோ அல்லது வேறு எங்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. பாதிக்கப்பட்டவர் புகாரினை எந்தக் காவல் நிலையத்தில் வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். இது ஜீரோ எப்.ஐ.ஆர் என்று அழைக்கப்படுகிறது.
ஒரு காவல் நிலையம் மற்றொரு காவல் நிலையத்தின் அதிகார வரம்பில் நடந்ததாகக் கூறப்படும் குற்றம் தொடர்பான புகாரைப் பெற்றால், புகாரை ஏற்றுக்கொண்டு ஜீரோ எஃப்ஐஆர் பதிவு செய்த ஒரு காவல் நிலையம் சார்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அந்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு சம்பந்தப்பட்ட காவல் நிலையம் உடனே தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் பாரதிய நாகரிக் சுரக்‌ஷா 2023, பிரிவு 173 (1)-ன் கீழ் வகுக்கப்பட்டுள்ள விதிமுறை.

காவல் நிலைய அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களின் புகாரினைப் பெற்றுக் கொள்ளாமல், காவல் நிலைய எல்லையைக் காரணம் காட்டி புகாரை வாங்க மறுப்பதற்கு அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. பாதிக்கப்பட்டவரின் புகாரை வாங்க மறுப்பது, தண்டனைக்குரிய குற்றமாகும்.

ஜீரோ எஃப்ஐஆரி்ன் பயன்கள்
இதன் மூலம் பாதிக்கப்பட்டவர் குற்றச்சம்பவம் நடந்த காவல் நிலைய அதிகார எல்லையை பொருட்படுத்தாமல் அருகில் இருக்கக்கூடிய எந்தவொரு காவல் நிலையத்திலும் புகார் அளிக்க முடியும் என்பதால், ஒரு குற்றச் சம்பவத்தை விரைவில் பதிவு செய்து, தாமதமின்றி விசாரணை நடவடிக்கைகளைத் தொடங்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் பாதுகாப்பு வழங்கவும் இந்த ஜீரோ எஃப்ஐஆர் பெரிதும் உதவுகிறது.
குறிப்பாக, பாதிக்கப்படும் பெண்கள், முதியவர்கள் காவல் நிலையங்களில் எதிர்கொள்ளக்கூடிய சவால்களை எளிதாக்கும் வகையில், இது குற்றச்செயல்களை உடனடியாக பதிவு செய்து விசாரணையை துரிதமாக மேற்கொள்ளும் ஒரு எளிதான நடைமுறையாக விளங்குகிறது.

அனைத்து காவல் நிலையங்களும் இந்த நடைமுறையை பின்பற்றுவதன் மூலம், குற்றங்களை பதிவு செய்வதில் ஏற்படும் தாமதம் மற்றும் நடைமுறை சிக்கல்களை தடுக்க முடியும். இத்தகைய நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க உதவுவதோடு, நமது காவல்துறையின் பொறுப்பையும் அதிகரிக்கின்றன.

-விஜய்பாண்டியன் பிஏ.,எல்.எல்.பி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *